TAMIL
பி.வி.சிந்துவிற்கு கேரள அரசு சார்பில் பாராட்டு விழா

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று அசத்திய பி.வி.சிந்துவுக்கு கேரள அரசு சார்பில் திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள விளையாட்டு துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கேரளா ஒலிம்பிக் சங்கம் மற்றும் விளையாட்டு துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவானது திருவனந்தபுரத்தில் உள்ள ஜிம்மி ஜார்ஜ் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அரங்கத்திற்கு செல்லும் வழியெங்கும் திரண்டிருந்த பொதுமக்கள் சிந்துவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கேரள அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் பரிசு தொகையை, கேரளா ஒலிம்பிக் சங்க தலைவர் வி.சுனில் குமார் பி.வி.சிந்துவிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பி.வி.சிந்துவிற்கு கேரள அரசின் சிறப்பு விருதினை வழங்கி கவுரவித்தார்.
அப்போது பேசிய அவர், “பி.வி.சிந்துவின் கடின முயற்சியினால் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் அவருக்கு கிடைத்துள்ள வெற்றி, நமது நாட்டில், வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு மிகச்சிறந்த பாடமாக அமைந்துள்ளது. இரண்டு முறை உலக கோப்பை இறுதிச்சுற்றில் தோல்வியடைந்த பிறகு தற்போது அவர் பெற்றுள்ள வெற்றியின் மூலமாக தன்னைப்பற்றிய விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்” என்றார்.
அதன் பின்னர் பேசிய பி.வி.சிந்து, தனக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “நான் இந்த அழகிய மாநிலத்திற்கு பல முறை வந்திருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் வருவேன்.
டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என எல்லோரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். இதனால் என் மீது மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. மாறாக எனக்கு கிடைத்துள்ள உண்மையான அன்பை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.