CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பிக் பாஷ் லீக் – பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி பைனலில் நுழைந்தது பெர்த் ஸ்கார்சர்ஸ்
பிக் பாஷ் லீக் போட்டியின் சேலஞ்சர் சுற்று கன்னிபெராவில் நடைபெற்றது. இதில் பெர்த் ஸ்கார்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பான்கிராப், லிவிங்ஸ்டோன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி அணிக்கு அரை சதமடித்து அசத்தினர்.
லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரியாக விளாசினார். அவர் 39 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் மேலும்விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.
இறுதியில், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 18.1 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பான்கிராப் 58, மிட்செல் மார்ஷ் 49 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 18 ஓவரில் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் களமிறங்கியது.
பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் பிரிஸ்பேன் ஹீட் அணியினர் சிக்கித் திணறினர்.
அந்த அணியில் ஜோ பர்ன்ஸ் 38 ரன்னும், கிறிஸ் லின் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், பிரிஸ்பேன் ஹீட் 18 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 49 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.
பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி சார்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டும், பெஹ்ரண்டாப், ஆண்ட்ரூ டை, பவாத் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் பிப்ரவரி 6-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி.