TAMIL
பிக்பாஷ் லீக் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி
பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
குயின்ஸ்லாந்தில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்-பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது.
மன அழுத்த பிரச்சினையில் சிக்கி 1½ மாத ஓய்வுக்கு பிறகு களம் திரும்பிய கேப்டன் மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தில் பழைய அதிரடியை பார்க்க முடிந்தது.
ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.10¾ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மகிழ்ச்சிக்கு மத்தியில் களம் கண்ட மேக்ஸ்வெல் 39 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 83 ரன்கள் குவித்து குஷிப்படுத்தினார்.
பின்னர் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களே எடுத்தது.
இதனால் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட டாம் பாண்டன் (இங்கிலாந்து) விளாசிய 64 ரன்கள் பிரிஸ்பேன் ஹீட் அணியின் வெற்றிக்கு உதவவில்லை.