TAMIL
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி வெற்றி
இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்தது.
இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாளில் 183 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது.
இதனை அடுத்து தென்ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் இங்கிலாந்து அணி 217 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடியது.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 61.3 ஓவர்களில் 248 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.
அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதனால் தென்ஆப்பிரிக்க அணிக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இமாலய வெற்றி இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய வான்டெர் துஸ்சென் 98 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்வுட் பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பிராட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 77.1 ஓவர்களில் 274 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது.
இதனால் இங்கிலாந்து அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது.