TAMIL
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடிக்கு 5-வது பெண் குழந்தை: பொருத்தமான பெயரை அனுப்பும்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி. 16 வயதில் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த அப்ரிடி ஒரு நாள் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் (351 சிக்சர்) என்ற சிறப்புக்குரியவர்.
2017-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்ற அப்ரிடி தற்போது 20 ஓவர் மற்றும் 10 ஓவர் லீக் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
39 வயதான அப்ரிடிக்கு ஏற்கனவே 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அவரது மனைவி நாடியா மீண்டும் கர்ப்பமடைந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு இரு தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இந்த மகிழ்ச்சியை தனது நலம் விரும்பிகளுடனும், ரசிகர்களுடனும் ‘டுவிட்டர்’ மூலம் பகிர்ந்துள்ள அப்ரிடி, ‘கடவுளின் எல்லையில்லா ஆசியும், கருணையும் என் மீது இருக்கிறது.
ஏற்கனவே எனக்கு 4 அற்புதமான மகள்கள் தந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு மகள் மூலம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எனது மகள்களின் பெயர் அக்சா, அன்ஷா, அஜ்வா, அஸ்மரா. இந்த வரிசையில் புதிய வரவான 5-வது மகளுக்கும் ஆங்கில வரிசையில் ‘ஏ’ எழுத்தில் தொடங்கும் பெயரை சூட்ட விரும்புகிறேன்.
பொருத்தமான பெயரை தேர்வு செய்து நீங்கள் எனக்கு அனுப்பி வையுங்கள் என்று அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.