TAMIL
பந்தை எச்சிலால் தேய்க்க தடை; வியர்வையை பயன்படுத்த அனுமதி – ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை
கொரோனா அச்சுறுத்தல் தணிந்து மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது தற்போது எழுந்துள்ள சில நடைமுறை
சிக்கல்களை தீர்க்க எத்தகைய விதிமுறைகளை பின்பற்றுவது என்பது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே
தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கிரிக்கெட் கமிட்டி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியது.
உறுப்பினர்களான முன்னாள் வீரர்கள் ராகுல் டிராவிட், மஹேலா ஜெயவர்த்தனே, ஆன்ட்ரூ ஸ்டிராஸ், ஷான் பொல்லாக், ஆஸ்திரேலிய
முன்னாள் வீராங்கனை பெலின்டா கிளார்க், இலங்கை தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் உள்ளிட்டோர் தங்களது யோசனைகளை தெரிவித்தனர்.
இதன் முடிவில் தற்காலிகமாக சில புதிய விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* பந்தை ‘ஸ்விங்’ செய்வதற்காக களத்தில் வீரர்கள் அவ்வப்போது பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்குவார்கள்.
ஆனால் எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால் பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த தடை விதிப்பது என்று ஒரு மனதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே சமயம் பந்து வீச்சாளர்கள் வியர்வையால் பந்தை தேய்த்து பளபளப்பாக்க அனுமதி வழங்கப்படுகிறது.
வியர்வையின் மூலம் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பில்லை என்று ஐ.சி.சி. மருத்துவ குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
*டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2002-ம் ஆண்டில் இருந்து வெளிநாட்டு நடுவர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள்.
ஆனால் கொரோனா பீதியால் மற்ற நாடுகளுக்கு செல்வதில் நிறைய பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விமானங்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டி உள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலம் வரை உள்ளூர் நடுவர்களை சர்வதேச போட்டிகளுக்கு நியமித்து கொள்ளலாம்.
*நடுவர்களை வழக்கம் போல் ஐ.சி.சி.யே நியமிக்கும். குறிப்பிட்ட நாடுகளின் நடுவர்கள் ஐ.சி.சி.யின் எலைட் பட்டியலில் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இல்லாத பட்சத்தில் உள்ளூரில் சிறந்த நடுவர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள்.
*உலகம் முழுவதும் நடக்கும் போட்டிகளில் வெவ்வேறு விதமான நடுவர்களை நியமிக்கும் நிலை உள்ளதால் அவர்களுக்கு உதவுவதற்கு தொழில்நுட்பத்தை கூடுதலாக பயன்படுத்தலாம்.
நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை இன்னிங்சில் கூடுதலாக ஒரு முறை உபயோகிக்க அனுமதிக்க வேண்டும்.
மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் இது பொருந்தும்.
ஐ.சி.சி.யின் நிர்வாக குழுவினர் வருகிற 28-ந்தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசிக்க உள்ளனர். அப்போது மேற்கண்ட பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘நாம் இப்போது அசாதாரணமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடங்கும் போது போட்டியில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம்.
அதன் அடிப்படையிலேயே இடைக்கால நடவடிக்கையாக இந்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு உள்ளது’ என்று கும்பிளே தெரிவித்தார்.
சர்வதேச கால்பந்து போட்டிகளில் மாற்று வீரர்களின் எண்ணிக்கை 3-ல் இருந்து 5 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
அதே போன்ற நடைமுறையை இங்கும் பின்பற்றலாமா அதாவது ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் பரிசோதனை முடிவு அரை மணி நேரத்திற்குள் வந்துவிடலாம் என்பதால், ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதியானால் மருத்துவ நடைமுறைப்படி இரு அணியினரும், பயிற்சியாளரும் 2 வாரம் தனிமைப்படுத்த வேண்டியது வரும்.
அப்படி இருக்கும் போது கொரோனா பாதிப்புக்கு மாற்று வீரர் அவசியமில்லை என்ற முடிவுக்கு கமிட்டியினர் வந்துள்ளனர்.
ஐ.சி.சி.க்கு கம்பீர் கோரிக்கை
இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில், ‘பந்து மீது எச்சிலை பயன்படுத்த தடை விதிக்கப்படுவது நிச்சயம் பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும்.
எனவே ஐ.சி.சி. மாற்று வழியை கொண்டு வர வேண்டும்.
பந்தை பளபளப்பாக்க வேறு வகையில் உதவ வேண்டியது முக்கியம்.
பந்தை பளபளப்பாக்காவிட்டால் ஆட்டம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் சரிசம சவால் நிறைந்ததாக இருக்காது.
முழுமையாக பேட்டிங்குக்கு சாதகமாக மாறும் போது, ஆட்டத்தை பார்க்க சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும்’ என்றார்.