CRICKETNEWSTAMIL

காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை – ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆவார். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது தலைமையிலான மும்பை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தி சாதனை படைத்தது.

ஐ.பி.எல். தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு இடது பின்தொடை தசைநாரில் கிழிவு ஏற்பட்டது. இதனால் சில ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் அடுத்த சில தினங்களில் இறுதிப்போட்டி உள்பட மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி 3 ஆட்டங்களில் பங்கேற்று விளையாடினார். இதனால் அவரது காயத்தன்மை கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியது. தான் நன்றாக இருப்பதாக ரோகித் சர்மாவும், அவர் 70 சதவீதம் மட்டுமே உடல்தகுதியுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலியும் கூறினர்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மட்டும் ரோகித் சர்மா சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஐ.பி.எல். முடிந்ததும் இந்திய வீரர்கள் துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர். ஆனால் ரோகித் சர்மாவுக்கு உடல்தகுதியை நிரூபிக்க அறிவுறுத்தப்பட்டதால் தாயகம் திரும்பினார்.

சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற ரோகித் சர்மா அங்கு உடல்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் காயம் தொடர்பாக தனது நிலைப்பாடு குறித்து 33 வயதான ரோகித் சர்மா முதல்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

எனது காயம் தொடர்பாக மக்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது பற்றி உண்மையிலேயே எனக்கு தெரியாது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திடமும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடமும் எனது காயம் குறித்து தொடர்ந்து தகவல் தெரிவித்த வண்ணம் இருந்தேன். ‘இது 20 ஓவர் வடிவிலான போட்டி, அதனால் என்னால் எளிதாக சமாளிக்க முடியும்’ என்று மும்பை அணி நிர்வாகத்திடம் நம்பிக்கையுடன் கூறினேன். கடைசி லீக்கில் ஆடுகிறேன், அதில் ஏதேனும் அசவுகரியமாக உணர்ந்தால், பிளே-ஆப் சுற்றில் விளையாடமாட்டேன் என்றும் அவர்களிடம் தெரிவித்தேன். அதன் பிறகே களம் கண்டேன்.

காயத்தில் இருந்து மீண்டு இன்னும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். தசைநாரை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளை செய்து வருகிறேன். நீண்ட வடிவிலான (டெஸ்ட்) போட்டிகளில் ஆடுவதற்கு முன்பாக தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அதன் காரணமாகவே இப்போது பெங்களூரு அகாடமியில் இருக்கிறேன்.

தொடை தசைநார் பிரச்சினையை முழுமையாக சரி செய்ய இன்னும் கொஞ்சம் உழைக்க வேண்டி உள்ளது. அதனால் தான் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை. ஏனெனில் 11 நாட்களில் 6 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது என்பது சிரமமாகும். அதில் பங்கேற்காததால் கிடைக்கும் 25 நாட்கள் இடைவெளியில் உடல்தகுதியை மேம்படுத்திக்கொண்டால், அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்கலின்றி விளையாடலாம் என்று நினைத்தேன். அதனால் குறுகிய வடிவிலான போட்டியில் விளையாடவேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன். மற்றவர்கள் ஏன் இதை பற்றி குழம்பிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker