CRICKETLATEST UPDATESTAMIL

தோல்வியை தழுவிய டெல்லி அணிக்கு அபராதம் விதிப்பு !

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் மந்த கதியில் பந்துவீசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவர் ஷிரேயஸ் ஐயருக்கு 12 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

13ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கொரோனா வைரஸின் சவாலுக்கு மத்தியில் தற்சமயம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. 11 லீக் போட்டிகள் மாத்திரம் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டு சுப்பர் ஓவர் முடிவுகளும் வெளியாகி 2020 ஐ.பி.எல் தொடரானது இரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தொடரின் 11ஆவது லீக் போட்டி ஷிரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கெபிடல்ஸ் மற்றும் டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையில் நேற்று (29) அபுதாபி ஷேக் ஷெயிட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 ஓட்டங்களினால் வெற்றிபெற்று 2020 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் தங்களது 3ஆவது போட்டியில் கன்னி வெற்றியை பதிவு செய்தது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஷிரேயஸ் ஐயர் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிதானமாக துடுப்பெடுத்தாடினாலும் பந்துவீச்சில் ஈடுபட்டிருந்த டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களையும் நிறைவுசெய்ய வழங்கப்பட்ட நேரத்திற்கும் மேலதிகமாக 23 நிமிடங்கள் தேவைப்பட்டது.

பொதுவாக T20 போட்டியொன்றில் 20 ஓவர்களையும் நிறைவு செய்வதற்கு ஒரு மணித்தியாலம் 30 நிமிடங்கள் வழங்கப்படும். ஆனால், குறித்த போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணி இவ்வாறு மேலதிகமாக 23 நிமிடங்கள் எடுத்திருந்தது.

இதன் காரணமாக இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் மந்த கதியில் பந்துவீச்சை மேற்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவர் ஷிரேயஸ் ஐயருக்கு 12 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கும் 12 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker