CRICKETSCHOOL SPORTSTAMIL

தொடர்ந்து போட்டியில் முன்னிலை வகிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114 ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (6) நிறைவுக்கு வந்தது.

இன்றைய நாள் நிறைவுக்கு வரும் போது, முதல் நாள் ஆதிக்கத்தோடு, சென். ஜோன்ஸ் கல்லூரி போட்டியில் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.

மூன்று நாட்கள் கொண்ட இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று (5) நிறைவுக்கு வரும் போது, யாழ். மத்தியின் முதல் இன்னிங்ஸினை (150) அடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடி வந்த சென். ஜோன்ஸ் கல்லூரி 118 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்பட்டது.

சென். ஜோன்ஸ் கல்லூரி துடுப்பாட்டம் சார்பாக களத்தில் நின்ற வினோஜன் 19 ஓட்டங்களையும், டினோஷன் 15 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று (6) போட்டியின் இரண்டாம் நாளில் 32 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் முதல் விக்கெட்டாக வினோஜன் மாறினார். இயலரசனின் பந்துவீச்சில் சன்சஜனிடம் பிடிகொடுத்த வினோஜன் 27 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து, சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு டினோஷன், சபேஷன் ஆகியோர் பலமளித்தனர். இதில், டினோஷன் 44 ஓட்டங்கள் பெற, பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சபேஷன் 43 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர், சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களான விதுஷன், சரண் ஆகியோரும் பெறுமதியான ஆட்டத்தினை வழங்கினர். இந்த இரண்டு வீரர்கள் மூலமும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் கடைசி விக்கெட்டுக்காக 37 ஓட்டங்கள் பெறப்பட்ட நிலையில், அவ்வணி 291 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பின்வரிசை துடுப்பாட்டம் சார்பில் அன்டன் அபிஷேக் 25 ஓட்டங்களை எடுக்க, சரண் 24 ஓட்டங்களை பெற்றார். இதேநேரம், இணைப்பாட்டம் ஒன்றுக்கு உதவியாக இருந்த விதுஷன் 7 ஓட்டங்களைப் பெற்றார்.



மறுமுனையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் பந்துவீச்சாளரான தீஷன் விதுஷன் 79 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அணித்தலைவர் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்து யாழ். மத்தி அணி, 141 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

தொடர்ந்து, யாழ். மத்திய கல்லூரி அணியினர் சிறிய தடுமாற்றத்தை காட்டிய போதிலும் பின்னர் போராடி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றனர்.

யாழ். மத்திய அணியின் துடுப்பாட்டத்தில் நம்பிக்கைகுரிய வீரர்களில் ஒருவரான இயலரசன் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழக்க, ஏனைய முக்கிய துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சரங்கன் 16 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தார்.

எனினும், சென். ஜோன்ஸ் கல்லூரியைவிட 90 ஓட்டங்கள் பின்தங்கியிருக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கு சன்சயன் 15 ஓட்டங்களையும், இந்துஜன் 13 ஓட்டங்களைப் பெற்றும் நம்பிக்கையளிக்கின்றனர்

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் டினோஷன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்ற, சரண் ஒரு விக்கெட்டைச் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker