FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL

திருகோணமலை உதைபந்தாட்ட லீக்கின் வளர்ச்சியில் தொய்வு நிலை

புதிதாக தெரிவாகும் நிர்வாகத்தினால் ஏறுமுகம் காணுமா?

கப்பல்களில் திருகோணமலை துறைமுகத்துக்கு சமுகமளித்த பிரித்தானியர் மற்றும் பிரித்தானிய படையினர் வெள்ளையர்கள் பொழுதுபோக்குக்காக தங்களுக்கிடையேயும் திருகோணமலை இளைஞர்களுடனும் விளையாடியதன் மூலம் திருகோணமலையில் உதைபந்தாட்டம் பிரபல்யமடைந்தது. இவ்விளையாட்டினால் ஈர்க்கப்பட்ட அக்காலத்து திருகோணமலை இளைஞர்களினால் 1920 களில் சிறுசிறு உதைப்பந்தாட்டக் கழகங்களை உருவாக்கி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் 1930 இல் திருகோணமலை விளையாட்டுச் சங்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பானது 1950 இல் திருகோணமலை உதைபந்தாட்டச் சங்கம் என பெயர் மாற்றம் செய்து மீண்டும் 1960 இல் திருகோணமலை உதைபந்தாட்ட லீக் என தன்னை பெயர் மாற்றம் செய்து இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அங்கத்துவ அமைப்பாக தன்னை வளர்த்துக் கொண்டது.

இந்த லீக்கில் ஒலிம்பிக்‌ஸ், சென். அந்தனீஸ், சன் ரைஸ், யுனைட்டட், ட்றிங்கோ யுத், ஈஸ்ரன் ஈகிள், ட்றிங்கோ டயமன்ட்ஸ், நியூ ஒலிம்பிக்ஸ், இலங்கை கடற்படை சிவிலியன், இலங்கை சீனி கூட்டுத்தாபனம், புனித சூசையப்பர் கல்லூரி, ‘ஆர்.கே. எம். இந்துக் கல்லூரி’, ‘சிங்கள மகா வித்தியாலயம்’, ‘இலங்கை வான் படை’, ‘இலங்கை பொலிஸ்’, ஆகிய பதினைந்து அணிகள் அங்கம் வகித்து வந்துள்ளன.

2000ஆம் ஆண்டு வரை பிரிவு 1, பிரிவு 2, பிரிவு 3, பிரிவு 4 என நான்கு பிரிவுகளுக்கான லீக் முறையிலான போட்டிகளும், விலகல் முறையிலான போட்டிகளும் 22 வயதின் கீழ் யுத் போட்டிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளன.. ‘சட்டத்தரணிகள் சவால் கிண்ணம்’, ‘திருகோணமலை லீக் கிண்ணம்’ ‘மாணிக்கராஜா சவால் கிண்ணம’ ‘லான்க் கிண்ணம்’ ‘ஜீவரட்ணம் வெற்றிக் கிண்ணம்’ ‘சிவசுப்ரமணியம் கிண்ணம்’ என்ற பெயரில் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் நடைபெற்றுள்ளன. பொங்கல் தின உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள்’ ‘​வெள்ளிக்கிண்ணம்,’ 50 ஆண்டு நிறைவையொட்டி 1989 இல் ‘கோல்டன் ‘ஜுபிலி’ (பொன் விழா) கொண்டாட்ட கிண்ணம் ஆகிய போட்டிகளும் நடைபெற்றுள்ளன. நாட்டில் நிலவிய யுத்தச் சூழ்நிலை காரணமாக நிர்வாகத்தினால் சில வருடங்கள் இப்போட்டிகளை நடாத்த இயலாமல் போயிற்று. மேலும், இலங்கையின் பல பாகங்களினாலும் நடாத்தப்பட்டுள்ள அழைப்புப் போட்டிகளிலும் திருகோணமலை சார்பாக அணிகள் கலந்து கொண்டுள்ளன. 1980 முதல் 1983 வரை தொடர்ச்சியாக திருகோணமலை லீக்கினால் நடாத்தப்பட்ட அழைப்புச் சுற்றுப்போட்டியில் இலங்கையின் முப்படையைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டுள்ளமையானது திருகோணமலை உதைபந்தாட்டத்தின் சிறப்பை எடுத்தியம்புகின்றது. 1981இல் போட்டிகள் மின்னொளியில் இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக மாகாண ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் திறமையான பல வீரர்களை உருவாக்கி இலங்கைக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையை திருகோணமலை உதைப்பந்தாட்ட லீக் தன்னகத்தே கொண்டுள்ளது. திருகோணமலையில் மிகச் சிறந்த வீர்ர்களென போற்றப்பட்டு, உதைப்பந்தாட்ட இரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற பல வீரர்கள் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதுடன் திருகோணமலையின் உதைபந்தாட்ட வளர்ச்சிக்கு பல வழிகளிலும் தங்களது ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

லியோ கொரனோலிஸ், நூர், ராஜா இமானுவேல், சுமதிபால, சண்முகம் (குழந்தை), ஜோன்பிள்ளை, என்டனி, யோகராஜா (இறைபதமய்தியவர்), சௌஜா, ஹெரல்ட் அந்தனி, வின்சன் லோகநாதன், ராஜசிங்கம், கிளமென்ட் டீ சில்வா, பாலேந்திரன், மத்தியூஸ் ஆகியோர் திருகோணமலையில் உருவாகி தேசிய அணியில் இடம் பிடித்து சாதனை படைத்த வீர்ர்களாவர். கிளமென்ட் டீ சில்வா 1970 முதல் 1984 வரை இலங்கை தேசிய அணிக்காக விளையாடியுள்ளதுடன் 1973 முதல் 1979 வரை தேசிய அணியின் தலைவாராக விளையாடியுள்ளார். இவர் இலங்கை சிரேஷ்ட தேசிய அணியின் தலைவாரக விளையாடிய அதே காலப்பகுதியில் அவரது சகோதரர் நிமல் சில்வா இலங்கை கனிஷ்ட தேசிய அணியின் தலைவராக விளையாடியுள்ளார். இவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள். இலங்கை சிரேஷ்ட, கனிஷ்ட அணிகளில் தலைவர்களாக விளையாடிள்ளமையானது இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு சந்தர்ப்பமாக இன்று வரை திகழ்கின்றது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker