TAMIL

தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி வலுவானது: ஆல்-ரவுண்டர் பிராவோ பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 36 வயதான வெய்ன் பிராவோ இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இரு மாதங்களுக்கு முன்பு நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது, அணி வீரர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் வீரர்களின் பேட்டிங் வரிசை குறித்து விளக்கினார்.

அதில் எனது பெயர் 9-வது இடத்தில் இருந்தது. எந்த ஒரு 20 ஓவர் அணியிலும் நான் 9-வது பேட்டிங் வரிசையில் களம் கண்டதில்லை என்று சக வீரர்களிடம் கூறினேன். அணியின் பேட்டிங் வரிசையை கண்டு வியக்கிறேன்.

2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை விட தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியே பலமிக்கதாக இருக்கிறது.

இது தமாஷ் அல்ல. அணியில் 10-வது வரிசை வீரர்கள் கூட பேட்டிங் செய்யக்கூடிய திறமைசாலிகள் ஆவர். இத்தனைக்கும் மற்றொரு ஆல்-ரவுண்டர் சுனில் நரின் கூட இந்த பட்டியலில் இல்லை.

அவரும் வந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

சுனில் நரின் 10 அல்லது 11-வது வரிசையில் பேட்டிங் செய்வார். இப்போது 20 ஓவர் போட்டிகளில் தொடக்க வீரராகவும் ஆடுகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி முழு பலத்துடன் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள். இவின் லீவிஸ் ஆட்டம் இழந்தால் ஹெட்மயர் வருவார். ஹெட்மயரை வெளியேற்றினால், நிகோலஸ் பூரன் இறங்குவார். லென்டில் சிமோன்சை அவுட் ஆக்கினால், ஆந்த்ரே ரஸ்செல் வருவார்.

அவரை வீழ்த்தினால் கேப்டன் பொல்லார்ட், ரோவ்மன் பவெல் என்று வந்து கொண்டே இருப்பார்கள். கடைசியில் என்னையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

இந்த பேட்டிங் வரிசை உலகின் எந்த ஒரு எதிரணியையும் அச்சுறுத்தும்.

இது தான் என்னை பரவசப்படுத்துகிறது. எனவே ஒரு பந்து வீச்சாளராக எதிரணியின் ரன் வேகத்தை குறிப்பாக கடைசி கட்டத்தில் கட்டுப்படுத்த முயற்சிப்பேன்.

வெற்றியை விரும்பக்கூடியவர், பொல்லார்ட். அது தான் மிகவும் முக்கியமான விஷயம்.

ஒரு கேப்டனாக வெற்றிக்காக எதையும் செய்வார். அதை சரியான வழியில் கையாளுவார்.

நேர்மையான ஒரு வீரர்.

உலகம் முழுவதும் மதிப்புமிக்க ஒரு வீராக வலம் வருகிறார்.

அதிகமான 20 ஓவர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.

இவ்வாறு பிராவோ கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker