TAMIL
தகுதி போட்டியில் ஜரீனை எதிர்கொள்வதில் பயம் இல்லை – குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி
உலக குத்துச்சண்டை போட்டியில் 6 தங்கம் உள்பட 8 பதக்கம் வென்ற சாதனையாளரான இந்திய மூத்த வீராங்கனை மேரிகோமை (51 கிலோ எடைப்பிரிவு) ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றுக்கு எந்த வித தகுதி போட்டியும் இன்றி நேரடியாக தேர்வு செய்ய இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இதே எடைப்பிரிவில் விளையாடும் இந்திய இளம் வீராங்கனை நிகாத் ஜரீன், தனக்கும், மேரிகோமுக்கும் இடையே தகுதி போட்டி நடத்தி அதில் சிறந்தவரை அடையாளம் கண்டு ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு அனுப்ப வேண்டும், சாம்பியன் என்ற வகையில் அவருக்கு சலுகை அளிக்க கூடாது என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார். மேலும் இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவுக்கும் கடிதம் எழுதினார்.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் அணித் தேர்வில் விளையாட்டுத்துறை தலையிடாது, ஆனால் நிகாத் ஜரீன்- மேரிகோம் விவகாரத்தில் சிறந்த முறையில் தீர்வு காண வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் சர்ச்சை குறித்து மேரிகோமிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘சமீபத்தில் உலக குத்துச்சண்டை போட்டியில் நான் வெண்கலம் வென்றதால் எனக்கு தகுதி போட்டி இல்லாமல் ஒலிம்பிக் தகுதி சுற்றில் நேரடியாக விளையாட வைக்க இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முடிவு செய்துள்ளது. இதில் நான் எதுவும் செய்ய முடியாது. எனது வேலை, களத்தில் திறமையை வெளிப்படுத்துவது தான். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதன்படி செயல்படுவேன்.
தகுதி போட்டியில் நிகாத் ஜரீனுடன் மோதுவதற்கு நான் பயப்படவில்லை. அவரை எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன். அவரை நான் பலமுறை வீழ்த்தி இருக்கிறேன். ஆனாலும் தொடர்ந்து எனக்கு சவால் விடுத்து வருகிறார். சவால் விடுவது எளிது. ஆனால் களத்தில் சாதிப்பது கடினம். தகுதி போட்டி என்பது சம்பிரதாயத்துக்காகத் தான். ஒலிம்பிக்கில் யாரால் பதக்கம் வெல்ல முடியும் என்பதை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் அறியும்’ என்றார்.
நிகாத் ஜரீனின் கோரிக்கைக்கு முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா ஆதரவு தெரிவித்துள்ளது குறித்து மேரிகோமிடம் கேட்ட போது, ‘அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். ஆனால் நானும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கணிசமான தங்கப்பதக்கங்களை குவித்துள்ளேன்.
குத்துச்சண்டை விவகாரத்தில் தலையிடுவது அவரது வேலை இல்லை. நான் துப்பாக்கி சுடுதல் குறித்து பேசுவதில்லை. எனவே அவரும் குத்துச்சண்டை விஷயம் குறித்து பேசாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. குத்துச்சண்டை போட்டியில் உள்ள விதிமுறைகள் அவருக்கு சரியாக தெரியாது. அது மட்டுமின்றி அபினவ் பிந்த்ரா ஒவ்வொரு துப்பாக்கி சுடுதல் தொடருக்கு முன்பாகவும் தகுதி போட்டியில் விளையாடித்தான் சென்றார் என்று நான் நினைக்கவில்லை. என்றார்.