TAMIL
டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ராஜினாமா – நேர்மையாக செயல்படமுடியவில்லை என்று புகார்
டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக கடந்த 20 மாதங்களாக இருந்து வந்தவர் மூத்த பத்திரிகையாளரான ரஜத் சர்மா. அவர் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட பொதுச்செயலாளர் வினோத் திஹராவுடனான மோதல் வலுத்ததாலும், தலைவர் பதவிக்கு உரிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாலும் ரஜத் சர்மா இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
ராஜினாமா குறித்து ரஜத் சர்மா தனது டுவிட்டர் பதிவில் , ‘டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் எல்லா நேரங்களிலும் கடும் நெருக்கடி அளிக்கப்பட்டது. கிரிக்கெட் நலனை விட சுய நலனுக்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்பட எனக்கு பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இதனால் என்னால் இந்த பதவியில் நீடிக்க முடியவில்லை. நேர்மை மற்றும் வெளிப்படையாக செயல்பட வேண்டும் என்ற கொள்கையில் எதற்காகவும் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது. எனவே தான் எனது பதவியில் இருந்து உடனடியாக விலக முடிவு செய்தேன். டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு எனது வாழ்த்துகள்’ என்று புகார் தெரிவித்துள்ளார்.
பின்னர் ரஜத் சர்மா அளித்த ஒரு பேட்டியில், ‘எனது ராஜினாமாவின் மூலம் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் உண்மையான முகத்தை உலகுக்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒப்பந்தம் மற்றும் டெண்டர்களை பெற்று சுய லாபம் அடைவதற்காகவே சிலர் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள். அத்துடன் அவர்கள் அணி தேர்வு விஷயத்திலும் தலையிடுகிறார்கள். அடுத்த 2 ஆண்டு காலத்துக்கு எனது பதவியில் எளிதாக நீடிக்க முடியும். எனது ராஜினாமா அனைவருக்கும் எச்சரிக்கை மணியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் பதவி விலகாவிட்டால் அது உறுப்பினர்களுக்கு நியாயமற்றதாக அமைந்து விடும். கடந்த 1½ ஆண்டுகளாக நாங்கள் வெளிப்படையாக செயல்பட்டோம். வீரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை பூர்த்தி செய்தோம். நியாயமற்ற செயலில் ஈடுபடும் நிர்வாகிகளை இந்திய கிரிக்கெட் வாரியம், சுப்ரீம் கோர்ட்டு என்ன செய்யப்போகிறது என்பதை பார்க்க விரும்புகிறேன். எனது குரல் இன்னும் வலுவாக ஒலிக்கும் என்று உறுதி அளிக்கிறேன். டெல்லி கிரிக்கெட் சங்க தலைவரை விட உறுப்பினருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்று நான் நினைக்கிறேன்’ என்று கூறினார்.
ரஜத் சர்மா விலகல் குறித்து பொதுச்செயலாளர் வினோத் திஹரா கருத்து தெரிவிக்கையில், ‘ரஜத் சர்மா ராஜினாமா செய்தது நல்ல முடிவாகும். அவருக்கு வழங்கப்பட்டு இருந்த அதிகாரத்தை வாபஸ் வாங்க 8 இயக்குனர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தலைவர் பதவி மீது எனக்கு ஆசை எதுவும் கிடையாது. பொதுச்செயலாளராக எனக்கு நிறைய பணிகள் இருக்கிறது. நாங்கள் அவசர கூட்டம் நடத்தி ரஜத் சர்மாவின் ராஜினாமாவை ஏற்போம். அடுத்து நாங்கள் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி புதிய தலைவரை தேர்வு செய்வோம்’ என்றார்.