CRICKETLATEST UPDATESNEWSTAMIL
டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி

நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணி முதலில் களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில் 19 ரன்களும், செய்பெர்ட் 20 பந்தில் 35 ரன்களும் அடித்தனர்.
அதன்பின் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். கான்வே 45 பந்தில் 63 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 20 பந்தில் 31 ரன்களும் அடிக்க நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது.
பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 59 பந்தில் 89 ரன்கள் விளாசினார்.
அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 29 பந்தில் 41 ரன்கள் அடித்தார். கேப்டன் ஷதப் கான் (0), பஹீம் அஷ்ரப் (2), குஷ்தில் ஷா (13) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் கடைசி ஓவரின் 4-வது பந்தை இஃபதிகார் அகமது சிக்சருக்கு தூக்க பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இரண்டு பேட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த பாகிஸ்தான், 3-வது மற்றும் கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.