TAMIL
டி20 உலகக் கோப்பை 2022-க்கு ஒத்தி வைப்பு? ஐசிசி
கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் விளையாட்டு தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நடப்பு ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுமா எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தாண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை அடுத்தாண்டுக்கு ஒத்தி வைக்க ஐசிசி நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையைத் திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது அடுத்தாண்டு வரை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாகக் குழு மே 28 ஆம் தேதி கூடி ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள ஐசிசி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர்,
கூட்டத்தின் போது மூன்று முக்கிய விஷயங்களை விவாதிக்க உள்ளோம். முதலில் திட்டமிட்டபடி போட்டித் தொடரை நடத்துவது, இரண்டாவது ரசிகர்களை மைதானத்தில் அனுமதிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது.
மூன்றாவது, போட்டியை 2022 க்கு மாற்றலாம் என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை 2022 க்கு மாற்றுவதற்கான ஆலோசனையை ஐசிசி வரும் மே 28 அன்று கூடும் போது அட்டவணையில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.