TAMIL
டி-20 உலகக் கோப்பையில் டோனி விளையாடுவாரா? ஹர்பஜன் சிங் முக்கிய தகவல்
இந்திய நட்சத்திர வீரர் டோனி எதிர்வரும் 2020 டி-20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பது குறித்து மூத்த இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பி.சிசிஐ-யின் ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் இருந்து டோனி பெயர் நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
இதன் மூலம் டோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹர்பஜன் சிங், டோனி, எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடினாலும், அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.
டோனி, கடந்த சீசனில் பிசிசிஐ பட்டியலில் ஏ பிரிவில் இருந்தார், ஆனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் உலகக் கோப்பை அரையிறுதி தோல்வியிலிருந்து டோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
2019 உலகக் கோப்பை வரை மட்டும் விளையாட வேண்டும் என்று டோனி முடிவு செய்திருந்தால், அவர் மீண்டும் இந்தியாவுக்காக விளையாட மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.
ஏற்கனவே பயிற்சியைத் தொடங்கியுள்ளதால், டோனி டி-20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்பஜன், டோனி ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறார் என கூறினார்.
அதேசமயம், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டோனியின் எதிர்காலம் குறித்த தெளிவு ஐபிஎல்-க்குப் பிறகு மட்டுமே கிடைக்கும் என்று சுட்டிக்காட்டியிருந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.