TAMIL

சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது; டோனி எனது மூத்த சகோதரர்- சுரேஷ் ரெய்னா உருக்கம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரரான சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் விலகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

13 வது ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுவதற்குப் பின்னால் ‘தனிப்பட்ட காரணங்களை’ மேற்கோள் காட்டிய ரெய்னா, இந்தியாவுக்குத் திரும்பினார்.

டோனிக்கும், ரெய்னாவுக்கும் இடையில் அறை தொடர்பாக விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக ரெய்னா மவுனம் கலைத்துள்ளார்.தான் போட்டியில் இருந்து விலகியதற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது:-

உயிருக்கு ஆபத்து எனும் போது எப்படி ஒருவரால் விளையாட முடியும்.

எனக்கு இரண்டு சிறு குழந்தைகளுடன் ஒரு குடும்பம் உள்ளது – மற்றும் வயதான பெற்றோர்கள் உள்ளனர். என்னைப் பொறுத்தவரை குடும்பத்திற்குத் திரும்புவது மிகவும் முக்கியமானது.

“இது ஒரு கடினமான முடிவு. சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது, ஆனால் துபாயில் என் குழந்தைகளின் முகம் தோன்றியதும், கொரோனா நிலைமை நன்றாக இல்லாததும், நான் திரும்ப முடிவு செய்தேன் என கூறினார்

டோனியுடனான பிளவு பற்றிய செய்திகளை மறுத்த ரெய்னா மஹிபாய் எனது மூத்த சகோதரரைப் போன்றவர். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் என கூறினார்.

துபாயில் உள்ள கொரோனா வைரஸ் நிலைமையைப் பொறுத்து போட்டிகளில் மீண்டும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பையும் ரெய்னா நிராகரிக்கவில்லை.

நான் என்றென்றும் ஒரு சிஎஸ்கே வீரர். துபாயில் நிலைமை சிறப்பாக வந்தால், நான் கூட திரும்பி வரலாம். கதவு எனக்கு மூடப்படவில்லை.

சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் என்னை அவரது மகன் போல் பார்க்கிறார்- அணி உரிமையாளர் சீனிவாசன் கூறியதை தந்தை திட்டியது போல் உணருகிறேன்.

அணியில் இருந்து நான் விலகியது பற்றி சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டன. தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் தான் இருக்கிறேன். விரைவில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவேன்.

யாரும் 12.5 கோடி ரூபாய் வருமானத்தை விட்டு திடமான காரணமின்றி விலகிச் செல்ல மாட்டார்கள். நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம், ஆனால் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன் என கூறினார்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker