CRICKETLATEST UPDATESNEWSTAMIL

சேப்பாக்கம் ஆடுகளம் மோசமானதா? மைக்கேல் வாகன்-வார்னே டுவிட்டரில் மோதல்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சேப்பாக்கம் ஆடுகளத்தில் முதல் நாளில் இருந்தே பந்து திரும்பியதால் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். ஆனாலும் இந்திய வீரர்களில் ரோகித்சர்மா, ரகானே, ரி‌ஷப்பண்ட் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள்.ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் சிறப்பாக ஆட முடியவில்லை.

இதற்கிடையே இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சேப்பாக்கம் ஆடுகளத்தை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டார். இதற்கு ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே பதில் அளித்தார். இருவருக்கும் இடையே நடந்த வாதம் டுவிட்டரில் வார்த்தை போராக மாறியது. அதன் விவரம் வருமாறு:-

வாகன்:- சேப்பாக்கம் ஆடுகளம் அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்தியா சிறப்பாக ஆடியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இது 5 நாள் நடைபெறும் டெஸ்ட் ஆட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட ஆடுகளம் அல்ல.

வார்னே:- டாஸ் வெல்வது மிகவும் முக்கியமானது. காரணம் முதல் டெஸ்டில் முதல் 2 நாட்களில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. ஆனால் 2-வது டெஸ்டில் முதல் நாளில் இருந்தே பந்து திரும்புகிறது. இங்கிலாந்து அணி இந்தியாவை 220 ரன்களுக்கு சுருட்டி இருக்க வேண்டும்.

இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதை ரோகித் சர்மா நிரூபித்து காட்டி உள்ளார்.

வாகன்:- இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ததை போல் முதல் டெஸ்டில் ஆடி இருந்தால் டிரா செய்து இருக்கலாம். இந்த ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்தது அல்ல.

வார்னே:- முதல் டெஸ்டில் கடைசி சில நாட் களில் தான் ஆடுகளம் பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இந்தியாவுக்கு வாய்ப்பு இல்லை என்ற போது ஆடுகளம் குறித்து யாரும் ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

இந்த டெஸ்டில் குறைந்த பட்சம் இரண்டு அணிகளுக்கும் முதல் பந்தில் இருந்தே ஒரே நிலை தான். இங்கிலாந்து மோசமாக பந்து வீசியது. ரோகித், ரி‌ஷப்பண்ட், ரகானே ஆகியோர் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை காண்பித்துள்ளனர்.

பந்து பிட்ச் ஆன பிறகு பாதையில் விலகுவதற்கும், சுழல்வதற்கும் வித்தியாசம் இல்லை. பேட்டிங்குக்கும், பந்து வீச்சுக்கும் இடையே எப்போதும் நியாயமான போட்டி வேண்டும்.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை விட இந்தியா சிறப்பாக பேட்டிங் செய்துள்ளது. அபாரமாக பந்தும் வீசியுள்ளது. இந்த ஆடுகளம் அதிகப்படியாக பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது.

வாகன்:- அனைத்து வகையிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால் முதல் பந்தில் இருந்தே ஆடுகளம் ஒரே மாதிரி இல்லை. உள்நாட்டில் சாதகம் பெற ஆடுகளத்தை எப்படி வேண்டுமோ அப்படி தயாரித்துக்கொள்ளலாம்.

ஆனால் டெஸ்ட் ஆட்டத்துக்கு இந்த ஆடுகளம் மோசமானது. நான் இந்திய அணியாக இருந்திருந்தால் இதையே தான் செய்திருப்பேன்.

இவ்வாறு இருவரும் டுவிட்டரில் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து விவாதித்து கொண்டனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker