TAMIL
சென்னையில் பயிற்சியின் போது டோனியின் காலில் விழுந்த ரசிகர்
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சேப்பாக்கத்தில் முதலாவது ஆட்டம் ஏப்ரல் 2-ந்தேதி (சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதல்) நடக்கிறது.
இதையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், கரண் ஷர்மா, பியுஷ் சாவ்லா, சாய் கிஷோார், ஜெகதீசன் உள்ளிட்டோர் சேப்பாக்கத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்தவித சர்வதேச போட்டியிலும் விளையாடாத டோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் இப்போதே ஆவல் கொண்டுள்ளனர்.
நேற்று பயிற்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.
அவர்கள், ‘டோனி…டோனி…. தல…தல’ என்று கோஷமிட்டனர்.
இதற்கிடையே ஒரு ரசிகர் திடீரென மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து டோனியை நோக்கி ஓடினார்.
டோனியின் காலில் விழுந்து வணங்கிய அந்த ரசிகரை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து எச்சரித்து வெளியே அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினமும் இதே போல் ரசிகர் ஒருவர் டோனியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.