FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து : ரியல் மாட்ரிட் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை மாட்ரிட்டில் அரங்கேறிய ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் 13 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணி, மான்செங்பாக் (ஜெர்மனி) அணியை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் கட்டுப்பாட்டிலேயே பந்து அதிக நேரம் வலம் வந்தது. 9-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் லூகாஸ் வஸ்குஸ் கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் கரிம் பென்ஜிமா தலையால் முட்டி அருமையாக கோலாக்கினார்.

31-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி மீண்டும் கோல் அடித்தது. முதல் கோலை அடித்த கரிம் பென்ஜிமா இந்த கோலையும் தலையால் முட்டி அடித்து அசத்தினார். பதில் கோல் திருப்ப மான்செங்பாக் அணியினர் எடுத்த கடும் முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மான்செங்பாக் அணியை வீழ்த்தியது.

6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் டிராவும், 2 தோல்வியும் கண்டு இருந்த ரியல் மாட்ரிட் அணி இந்த வெற்றியின் மூலம் தனது பிரிவில் 3-வது இடத்தில் இருந்து அதிரடியாக முன்னேறி முதலிடத்தை (10 புள்ளிகள்) பிடித்ததுடன், கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் தகுதி பெற்றது. அத்துடன் லீக் சுற்றை ஒரு முறையும் கடக்காமல் இருந்தது இல்லை என்ற பெருமையையும் தக்கவைத்துக் கொண்டது. இதேபிரிவில் நடந்த இன்டர் மிலன் (இத்தாலி)-ஷக்தர் டான்ஸ்க் (உக்ரைன்) அணிகள் இடையிலான ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’வில் முடிந்தது.

‘ஏ’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 2-0 என்ற கோல் கணக்கில் லோகோமோடிவ் (ரஷியா) அணியை தோற்கடித்து 5-வது வெற்றியை ருசித்ததுடன், முதலிடத்தையும் தனதாக்கியது. இதே பிரிவில் நடந்த இன்னொரு லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) 2-0 என்ற கோல் கணக்கில் சால்ஸ்பர்க் (ஆஸ்திரியா) அணியை சாய்த்து 2-வது இடத்தை பிடித்தது. இந்த பிரிவில் இருந்து பேயர்ன் முனிச் (16 புள்ளிகள்), அட்லெடிகோ மாட்ரிட் (9 புள்ளிகள்) ஆகிய அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தன.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker