TAMIL

கோலியை விட ஸ்டீவன் சுமித் சிறந்தவர் – பிரெட்லீ சொல்கிறார்

‘இன்ஸ்டாகிராம்’ மூலம் கலந்துரையாடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீயிடம் இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் ஆகியோரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரெட்லீ, ‘உண்மையில் இது மிகவும் கடினமான கேள்வி.

இருவரிடமும் நிறைய திறமை உள்ளன. விராட் கோலியின் பேட்டிங் தொழில்நுட்பமும், ஷாட்டுகளும் அருமையாக இருக்கும்.

ஆனால் ஸ்டீவன் சுமித் ஓராண்டு தடை காலத்தை அனுபவித்து மனவலிமையுடன் திரும்ப வந்து அற்புதமாக விளையாடி வருகிறார்.

அதனால் இப்போதைக்கு எனது தேர்வு ஸ்டீவன் சுமித் தான். கிட்டத்தட்ட பிராட்மேன் போன்று அவரால் உருவெடுக்க முடியும்’ என்றார்.

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்விக்கு, இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் பெயரை கூறினார். ‘தெண்டுல்கரை பற்றி சொல்வது என்றால் எனது பந்து வீச்சை எதிர்த்து ஆடும் போது மட்டும் அவருக்கு கூடுதல் நேரம் கிடைப்பதாக தோன்றும்.

எனது பவுலிங்கை அவர் அடித்து விரட்டும் போது இவ்வாறு உணர்ந்திருக்கிறேன்.

பிரையன் லாராவை எடுத்துக் கொண்டால் எவ்வளவு வேகமாக வீசினாலும் பந்தை மைதானத்தின் 6 பகுதிகளுக்கு விரட்டக்கூடியவர்.

தெண்டுல்கர், லாரா இடையே சரிசம போட்டி நிலவினாலும் என்னை பொறுத்தரை தெண்டுல்கர் தான் சிறந்தவர்.

இதேபோல் முழு நிறைவான ஒரு கிரிக்கெட் வீரர் என்றால் அது தென்ஆப்பிரிக்க முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ் தான்’ என்று பிரெட்லீ கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ‘இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட்டில் இன்னும் பல இரட்டை சதங்களை அடிப்பார் என்ற நம்புகிறேன்.

ஆனால் தயவு செய்து ஆஸ்திரேலியாவுக்கு (ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் விளாசியுள்ளார்) எதிராக மட்டும் இனி வேண்டாம். பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எதிராக கைவரிசையை காட்டுங்கள்’ என்று கெஞ்சினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker