CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
கொரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட நாட்கள் விளையாடுவது கடினம்- விராட்கோலி கருத்து
ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிக்காக கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் அமீரகம் சென்ற வீரர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வளைய நடைமுறைகளை பின்பற்றி விளையாடி வருகிறார்கள். இதனால் வீரர்கள் யாரும் அனுமதி அளிக்கப்படாத இடத்துக்கு செல்ல முடியாது. வெளிநபர்களையும் சந்தித்து பேச முடியாது. இந்த எதிர்பாராத வாழ்க்கை முறை குறித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனான விராட்கோலி தனது அணியின் ‘யூடியூப்’ நிகழ்ச்சியில் பேசுகையில்,
‘கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதால் ஒரே செயலை திரும்ப, திரும்ப செய்வது போல் இருக்கிறது. எங்களுக்கு அமைந்து இருப்பது போன்று அருமையான அணி வீரர்கள் அமைந்து விட்டால் இது கடினமாக இருக்காது. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தாலும் நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடி வருகிறோம். ஆனால் இதேபோல் மீண்டும், மீண்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் விளையாடினால் நிலைமை கடினமாக இருக்கும். இதுபோல் விளையாடுகையில் போட்டி அல்லது தொடரின் கால அளவு குறித்து கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரே சூழலில் 80 நாட்களுக்கு மேல் இருக்கும் போது வீரர்களுக்கு மனரீதியாக என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். வீரர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேச வாய்ப்பு அளிப்பது குறித்தும் யோசிக்க வேண்டும். இந்த விஷயங்கள் எல்லாம் குறித்து தீவிரமாக சிந்தித்து முடிவு காண வேண்டியது அவசியமானதாகும். முடிவில் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் நல்ல மனநிலையுடன் இருக்க வேண்டியது முக்கியமானதாகும்’ என்று தெரிவித்தார்.