TAMIL
‘கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்’ – கபில்தேவ் பேட்டி
ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றுத்தந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவும் இதே நிலைமையில் தான் இருக்கிறார்.
61 வயதான கபில்தேவ் தனது அனுபவம் குறித்து கூறியதாவது:-
மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
இதன் மூலம் மட்டும் தான் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் உதவிட முடியும். இதை நேர்மறை நோக்குடன் எடுத்துக் கொள்ளலாம்.
வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் சூழலை நமக்குள் ஒரு சவாலாக ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்களது குடும்பத்தினருடன் தான் இருக்கப்போகிறீர்கள்.
அதனால் உங்களுக்குள் உற்சாகப் படுத்திக் கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.
புத்தகம் வாசிக்கலாம், டி.வி. பார்க்கலாம், மியூசிக் கேட்கலாம், எல்லாவற்றையும் விட உங்களது குடும்பத்தினருடன் நன்கு உரையாடலாம்.
என்னை பாருங்கள். நான் வீட்டை பெருக்கி சுத்தம் செய்கிறேன். தோட்ட வேலைகளை பார்க்கிறேன்.
எனது சிறிய தோட்டம் இப்போது கோல்ப் விளையாடும் இடமாக மாறி விட்டது. எனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிடுகிறேன்.
ஆரம்ப காலத்தில் எனக்கு இது போன்று நேரம் கிடைத்ததில்லை. அது மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்கு பிடித்தமானவற்றை சமைத்து கொடுக்கிறேன்.
எனக்கு சமையல் எப்படி தெரியும் என்றால், ஒரு முறை இங்கிலாந்தில் விளையாடிக்கொண்டிருந்த போது எனது மனைவி ரோமி வந்திருந்தார். அந்த சமயத்தில் அவரிடம் இருந்து இதை கற்றுக்கொண்டேன்.
சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் இப்போது புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இதேபோல் கைகளை அடிக்கடி சோப்பால் கழுவ வேண்டும்.
பொது இடங் களில் எச்சில் துப்பவோ, சிறுநீர் கழிக்கவோ கூடாது போன்ற விஷயங்களையும் கற்றுக்கொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
நம்மை சுற்றியுள்ள பகுதியையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டவசமாக இத்தகைய நல்ல விஷயங்களை நான் அணியில் மூத்த வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தலைமுறையினர் இது போன்ற தவறுகளை செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
எப்போதும் நம்பிக்கையுடன், நேர்மறை எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.
கிரிக்கெட்டில் முந்தைய ஆட்டத்தில் சதம் அடித்து இருப்பீர்கள். அடுத்த ஆட்டத்தில் டக்-அவுட் ஆகி விடுவீர்கள்.
இதேபோல் ஒரு இன்னிங்சில் விக்கெட் எடுத்து இருக்கமாட்டீர்கள்.
இன்னொரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருப்பீர்கள். அதனால் இக்கட்டான சூழலில் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது.
கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவோம் என்பதை அறிவேன்.
அரசின் அறிவுரைப்படி வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்து அதன் மூலம் நமது அரசாங்கம் மற்றும் டாக்டர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு கபில்தேவ் கூறினார்.