TAMIL

‘கேப்டனுக்கு அதிக முக்கியத்துவம் கூடாது’- ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக 4 முறை கோப்பையை வென்றுத் தந்தவருமான ரோகித் சர்மா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

அணியின் கேப்டனாக இருக்கும் போது, நமக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கக்கூடாது என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.

நீண்ட திட்டமிடலை யோசித்து பார்த்தால் மற்ற வீரர்களின் பங்களிப்பே மிகவும் முக்கியம். இந்த விஷயத்தில் ஒவ்வொரு கேப்டனின் அணுகுமுறையும் வெவ்வேறு விதமாக இருக்கும்.

ஆனால் என்னை பொறுத்தவரை கேப்டனுக்கு குறைந்தபட்ச முக்கியத்துவம் என்ற கொள்கை கைகொடுக்கிறது.

கொரோனா பரவலால் நீண்ட நாட்களாக கையில் பேட்டை எடுக்கவில்லை. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு காலம் விளையாடாமல் முடங்கி இருப்பது இது தான் முதல்முறையாகும்.

பயிற்சியை தொடங்கும் போது கொஞ்சம் சவாலாக இருக்கும்.

விளையாடாத வரை நான் எந்த நிலையில் இருக்கிறேன், உணர்வு எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஆனால் உடல்ரீதியாக மிகவும் வலுவாக உள்ளேன்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள துபாய் ஆடுகளங்கள் சற்று வேகம் குறைந்தவை. இந்திய ஆடுகளங்களுடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது.

ஆனால் சீதோஷ்ண நிலை கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அங்கு 40 டிகிரி வெயில் கொளுத்தும். நீங்கள் எப்போதும் 40 டிகிரி வெப்ப நிலையில் விளையாடிக்கொண்டு இருப்பதில்லை.

அதை சமாளிப்பது சவாலானது. ஆனால் நிலைமையை நேரில் பார்த்த பிறகு சரியான வியூகங்களை வகுப்பது எளிதாகி விடும். போதுமான காலஅவகாசம் இருப்பதால் அவசரப்படத் தேவையில்லை.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker