FOOTBALLLATEST UPDATESNEWSTAMIL

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி இன்று தொடக்கம் : முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளா மோதல்

இந்திய வீரர்களுடன் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இணைந்து பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவான இதில் முதல் 3 ஆண்டுகளில் 8 அணிகளும், அதன் பிறகு 10 அணிகளும் கலந்து கொண்டன. முதலாவது சீசனில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி. அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தாவும், 2017-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.யும், 2018-ம் ஆண்டில் பெங்களூரு எப்.சி.யும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. கடந்த சீசனில் நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 3-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கியது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான (2020-21) 7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மார்ச் மாதம் வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் ஒரே மாநிலத்தில் அதாவது கோவாவில் ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது. அங்குள்ள பதோர்டா ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், பாம்போலிம் ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியம், வாஸ்கோ திலக் ஸ்டேடியம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி போட்டி நடைபெறுகிறது.

இந்த சீசனுக்கான போட்டியில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), மும்பை சிட்டி, எப்.சி.கோவா, பெங்களூரு எப்.சி., ஒடிசா எப்.சி., ஐதராபாத் எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகியவற்றுடன் 11-வது அணியாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஈஸ்ட் பெங்கால் அணி புதிதாக இணைந்து இருக்கிறது. அத்துடன் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன், அங்குள்ள நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த கால்பந்து கிளப்பான மோகன் பகான் கைகோர்த்து இருக்கிறது. இதனால் இனிமேல் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, ஏ.டி.கே. மோகன் பகான் என்று அழைக்கப்படும். இதன் மூலம் மேற்கு வங்காள கால்பந்து களத்தில் மிகப்பெரிய எதிரிகளாக திகழ்ந்த இரு அணிகள் இந்த முறை கோதாவில் குதிக்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடருக்காக ஒவ்வொரு அணிகளும், புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து இருப்பதுடன், கடந்த மாதமே கோவா சென்று கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்கு மத்தியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா பரவல் தொடங்கிய 8 மாதத்துக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் முதலாவது பெரிய போட்டி இதுவாகும். இந்த தொடரில் மொத்தம் 115 ஆட்டங்கள் இடம் பெறுகிறது. இது கடந்த ஆண்டை விட 20 ஆட்டங்கள் அதிகமாகும். ஜனவரி 11-ந் தேதி வரையிலான லீக் ஆட்ட அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்போலிம்மில் உள்ள ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது. 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான் அணி ராய் கிருஷ்ணா தலைமையில் களம் காணுகிறது. ராய் கிருஷ்ணா கடந்த சீசனில் 15 கோல்கள் அடித்து அசத்தி இருந்தார். ஸ்பெயினை சேர்ந்த எடு கார்சியா, தமிழகத்தை சேர்ந்த மைக்கேல் சூசைராஜ் உள்ளிட்ட சிறந்த வீரர்களும் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள். இரு கிளப்களும் இணைந்ததன் மூலம் அந்த அணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஹபாஸ் (ஸ்பெயின்) பணியாற்றுகிறார். அணியை வழிநடத்துவதில் திறமைசாலியான அவர் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி முதலாவது மற்றும் கடந்த சீசனில் கோப்பையை வென்ற போதும் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு முறை 2-வது இடம் பிடித்து இருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சீரற்ற ஆட்ட தன்மை கொண்டதாகும். ஒன்று லீக் சுற்றுடன் நடையை கட்டும் அல்லது இறுதிப்போட்டி வரை வீறு நடைபோடும். கடந்த சீசனில் ஐ லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கிபு விகுனா (ஸ்பெயின்) கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று இருக்கிறார். இதனால் இந்த போட்டியின் முடிவு இரு முன்னணி பயிற்சியாளர்களுக்கு இடையிலான பலப்பரீட்சையாகவும் பார்க்கப்படுகிறது.

தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. அதில் ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. கடைசி 2 சீசனிலும் கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி வாகை சூடி இருக்கிறது. அந்த மோசமான நிலையை கொல்கத்தா அணி மாற்றுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது லீக்கில் வருகிற 24-ந்தேதி ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை (இரவு 7.30 மணி) சந்திக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker