13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் அபுதாபியில் நேற்று மாலை நடந்த 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது.
‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஆனால் ராஜஸ்தானுக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை.
அபாயகரமான பேட்ஸ்மேன்களான ஸ்டீவன் சுமித்தும் (5 ரன்), சஞ்சு சாம்சனும் (4 ரன்) ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் (22 ரன்) நிலைக்கவில்லை.
இதனால் ராஜஸ்தான் அணி 31 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் தவித்தது. ராபின் உத்தப்பாவும் (17 ரன்) ஜொலிக்க தவறினார்.
சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹலும், வாஷிங்டன் சுந்தரும் தங்களது சுழல் ஜாலத்தில் எதிரணியின் வேகத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர்.
இதற்கு மத்தியில் இளம் வீரர் மஹிபால் லோம்ரோர் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ஓரளவு தாக்குப்பிடித்து அணியை கவுரவமான நிலைக்கு உயர்த்தினர்.
லோம்ரோர் 47 ரன்கள் (39 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். கடைசி ஓவரில் ராகுல் திவேதியா (24 ரன்) இரண்டு சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை 150 ரன்களை கடக்க வைத்தார்.
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 24 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளும், உதனா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
வாஷிங்டன் சுந்தர் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களில் 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டினார்.
பின்னர் 155 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்சும், தேவ்தத் படிக்கல்லும் களம் புகுந்தனர்.
ஆரோன் பிஞ்ச் (8 ரன்) ஸ்ரேயாஸ் கோபாலின் சுழற்பந்து வீச்சில் 3-வது ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
இந்த சீசனில் ‘பவர்-பிளே’யில் ஆட்டம் இழக்காத ஒரே தொடக்க வீரராக வலம் வந்த ஆரோன் பிஞ்சின் பெருமை முடிவுக்கு வந்தது.
அடுத்து படிக்கல்லுடன், கேப்டன் விராட் கோலி இணைந்தார்.
முந்தைய ஆட்டங்களில் சொதப்பிய கோலி இந்த ஆட்டத்தில் சுதாரிப்புடன் ஆடி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு துரத்தியடித்தார்.
நேர்த்தியாக ஆடிய இந்த ஜோடி வெற்றிப்பாதையை சுலபமாக்கியது.
நடப்பு தொடரில் 3-வது அரைசதத்தை கடந்த தேவ்தத் படிக்கல் 63 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.
அடுத்து இறங்கிய டிவில்லியர்ஸ் பவுண்டரியுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.
பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விராட் கோலி 72 ரன்களுடனும் (53 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), டிவில்லியர்ஸ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
பெங்களூரு வீரர் யுஸ்வேந்திர சாஹல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
4-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 3-வது வெற்றியாகும். ராஜஸ்தானுக்கு இது 2-வது தோல்வியாகும்.