TAMIL

ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர்: சுமித்தின் கருத்துக்கு ஆதரவு அளிக்க தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இருக்கும் இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது.

கொரோனா தாக்கம் காரணமாக தேர்தல் நடைமுறையில் தவிர்க்க முடியாத தாமதம் ஏற்பட்டதால் அவரது பதவிகாலம் மேலும் 2 மாதம் நீட்டிக்கப்பட்டது.

இதனால் வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ஐ.சி.சி. வருடாந்திர கூட்டத்தில் புதிய தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.

தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடமாட்டேன் என்று ஷசாங் மனோகர் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் கோலின் கிரேவ்ஸ் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குனரும், முன்னாள் கேப்டனுமான கிரேமி சுமித் நேற்று முன்தினம் அளித்த ஒரு பேட்டியில் தற்போதைய சூழலில் ஐ.சி.சி.யின் அடுத்த தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி பொருத்தமானவர் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்து இருந்தார்.

‘கங்குலி போன்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடிய அனுபவம் கொண்டவர் ஐ.சி.சி.யின் தலைவராக வந்தால் அது கிரிக்கெட்டுக்கு நன்றாக இருக்கும்.

அவர் தொடர்ந்து கிரிக்கெட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார்’ என்றும் கூறியிருந்தார். இந்த கருத்தை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜேக்யூஸ் பால் ஆதரித்து இருந்தார்.

இந்த நிலையில் கங்குலிக்கு ஆதரவாக கிரேமி சுமித் தெரிவித்த கருத்துக்கு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஆதரவு அளிக்க மறுத்துள்ளது.

இது தொடர்பாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைவர் கிறிஸ் நென்ஜானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பதை முடிவு செய்யும் விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் எங்கள் கிரிக்கெட் வாரியத்தின் நடைமுறைகளை நாங்கள் கண்டிப்பாக மதிக்க வேண்டும்.

தலைவர் பதவிக்கு வேட்பாளர் பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய சொந்த நடைமுறையின் படி முடிவு எடுத்து அதன்படி வாக்களிக்க வாரிய தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

கிரேமி சுமித்தின் கருத்து மீது நாங்கள் உயரிய மதிப்பு வைத்துள்ளோம்.

உலக கிரிக்கெட்டில் அதிகம் மதிக்கப்படும் நபர்களில் அவரும் ஒருவர்.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக மாற்றும் தனது கனவை நனவாக்க அவர் ஏற்கனவே நிறைய பங்களிப்பை அளித்து உள்ளார்.

முக்கியமான தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு குறித்து தற்போதைய சூழலில் நாங்கள் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker