TAMIL
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஒடிசா எப்.சி.யுடன் மோதியது. ஆக்ரோஷமாக ஆடிய இரு அணி வீரர்களும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டினர். முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை.
பிற்பாதியில் 51-வது நிமிடத்தில் சென்னை வீரர் வல்ஸ்கிஸ் கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. 54-வது நிமிடத்தில் ஒடிசா வீரர் ஸிஸ்கோ பதில் கோல் திருப்பினார். இதன் பிறகு மழை பெய்யத் தொடங்கியது. ஆனாலும் உத்வேகம் குறையாமல் இரு அணி வீரர்களும் முன்னிலை பெற தீவிரம் காட்டினர். 71-வது நிமிடத்தில் வல்ஸ்கிஸ் தலையால் முட்டி மறுபடியும் அருமையாக கோல் போட்டார். இந்த முன்னிலையையும் சென்னை அணி தக்க வைத்துக் கொள்ள தவறியது. 82-வது நிமிடத்தில் ஒடிசா வீரர் அரிடான் கோல் அடித்து ஆட்டத்தை மீண்டும் சமனுக்கு கொண்டு வந்தார்.
இறுதிகட்டத்தில் சென்னை அணியின் சில வாய்ப்புகள் நழுவிப் போயின. குறிப்பாக கோல் பகுதியில் நின்ற வல்ஸ்கிஸ் தலையால் முட்டி தள்ளிய போது பந்து கம்பத்திற்கு வெளியே சென்று ஏமாற்றி விட்டது. கடைசி நிமிடத்தில் சென்னை வீரர் லுசியான் கோயன், ஒடிசா வீரர் டிவான்டோ டயாங்கியின் காலை இடறி விட்டதால் இருவரும் அடிப்பார் போல் மோதிக் கொண்டனர். இந்த சலசலப்புடன் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 6-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி ஒரு வெற்றி, 2 டிரா, 3 தோல்வி என்று 5 புள்ளியுடன் பட்டியலில் 8-வது இடம் வகிக்கிறது. ஒடிசா அணி 6 புள்ளியுடன் (ஒரு வெற்றி, 3 டிரா, 2 தோல்வி) 6-வது இடத்தில் உள்ளது.