மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரான ரோகித்சர்மா, அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ரிக்கிப் பாண்டிங்கிடம் இருந்து தலைவர் பண்புகளை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளின் வரிசையில், மும்பை அணி உள்ளது.
ரோகித் தலைமையிலான மும்பை அணி இதுவரை ஐபிஎல் சீசனில் 4 முறை கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது.
இவரின் தலைமைப் பண்பு அந்தளவிற்கு அருமையாக இருக்கும், இவர் தலைமையிலான மும்பை அணியும் சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு ரோகித் அளித்துள்ள பேட்டியில், அணியின் அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை அணிக்காக அளிக்க வேண்டும் என்றும் தன்னுடைய பங்கும் மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
அணியின் 10 வீரர்களுடனும் தான் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு, அவர்கள் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை புரிய
வைப்பதாகவும் இந்த பண்பை ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து தான் கற்றதாகவும் ரோகித் கூறியுள்ளார்.
மேலும், வீரர்களிடம் தான் எதிர்பார்ப்பதை பெற முடியாது என்றும் அவர்களிடம் உள்ள சிறப்பான திறமைகளை நாம் பயன்படுத்திக கொள்ள வேண்டும் என்றும் பாண்டிங் அடிக்கடி கூறுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.