TAMIL
ஊழல் தடுப்பு விதிகளின் கீழ் சிக்கிய பிரபல முன்னணி வீரர்! கிரிக்கெட் விளையாட தடை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரராக இருப்பவர் உமர் அக்மல்.
ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக உமர் அக்மல் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை முடியும் வரை கிரிக்கெட் போட்டிகளிலும், அது தொடர்பான நிகழ்வுகளிலும் உமர் அக்மல் பங்கேற்கக் கூடாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஊழல் சட்ட விதி 4.7.1-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் அவர் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாட இருந்தார். அவர் மீதான தடை பிறபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மாற்றுவீரை குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி தேர்ந்தெடுக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
29 வயதான அக்மல், கடைசியாக பாகிஸ்தான் சர்வதேச அணிக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விளையாடினார்.
அவர் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளிலும் 121 ஒருநாள் போட்டிகளிலும், 84 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.