ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை அப்போது பஞ்சாப் அணிக்காக ஆடிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ‘மன்கட்’ முறையில் ரன்-அவுட் செய்தது சர்ச்சையை கிளப்பியது.
பந்து வீசும் முன்பே எதிர்முனையில் நிற்கும் பேட்ஸ்மேன் கிரீசுக்கு வெளியே வந்து முன்னேறி செல்லும் சமயத்தில் பந்து வீச்சாளர் பந்து
வீசாமல் உடனடியாக ரன்-அவுட் செய்யும் இத்தகைய ‘மன்கட்’முறை விதிப்படி சரி தான்.
ஆனால் உண்மையான விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்று கருதப்படுவதால் பெரும்பாலும் யாரும் மன்கட் செய்வதில்லை.
ஆனால் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறியுள்ள அஸ்வின் இந்த ஐ.பி.எல். தொடரிலும் மன்கட் ரன்அவுட் செய்வேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ‘அவ்வாறு ரன்-அவுட் செய்ய வேண்டாம்,
அது விளையாட்டின் உத்வேகத்தை சீர்குலைக்கும் செயல், இது தனது பாணியும் அல்ல’ என்று அஸ்வினுக்கு ஆலோசனை வழங்கினார்.
இருப்பினும் பேட்ஸ்மேன் இவ்வாறு கிரீசை விட்டு வெளியேறி மோசடி செய்தால், ரன் பெனால்டி விதிக்கலாம் என்ற அஸ்வினின் யோசனையை பாண்டிங் ஏற்றுக்கொண்டார்.
அதாவது பந்து வீசப்படும் முன்பே எதிர்முனை பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியே வந்தால் அந்த பந்தை பிரீபாலாக அறிவிக்க வேண்டும்.
பிரீபாலில் பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்தால் அந்த அணியின் ஸ்கோரில் 5 ரன் குறைக்கப்பட வேண்டும் என்பதே அஸ்வினின் பரிந்துரையாகும்.
இந்த சூழலில் மன்கட் விவகாரத்தில் அஸ்வின் திடீரென இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது 3-வது ஓவரை டெல்லி பவுலர் அஸ்வின் வீசினார்.
அப்போது மறுமுனையில் இருந்த பெங்களூரு பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச், அஸ்வின் கையில் இருந்து பந்து விடுபடுவதற்கு முன்பாகவே கிரீசை தாண்டி சில அடி நகர்ந்திருந்தார்.
இதை கவனித்த அஸ்வின், பிஞ்சை மன்கட் முறையில் அவுட் செய்து விடுவேன் என்பது போல் எச்சரித்தார்.
பிறகு நடுவர் பிஞ்சை கிரீசுக்குள் நிற்கும்படி அறிவுறுத்தினார்.
இதை கண்ட டெல்லி பயிற்சியாளர் பாண்டிங் புன்னகைத்தார்.
இது குறித்து அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், ‘தெளிவாக சொல்லி விடுகிறேன் இது தான் 2020-ம் ஆண்டின் முதலும், கடைசியுமான எச்சரிக்கை.
நான் இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்.
பிறகு (அவுட் செய்தால்) என்னை குறை சொல்லாதீர்.
ஆரோன் பிஞ்சும், நானும் நல்ல நண்பர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இந்த சீசனில் அஸ்வின் மன்கட் சர்ச்சையை கையில் எடுப்பார் என்றே தெரிகிறது.