CRICKETLATEST UPDATESNEWSTAMIL
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் – முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 166/2
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.
இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மயங்க் அகர்வால், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ரோகித் சர்மா, நவ்தீப் சைனி இடம் பெற்றனர். சைனி டெஸ்டில் அறிமுகமானார்.
ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மீண்டும் திரும்பினார். புகோவ்ஸ்கி முதல் முறையாக டெஸ்டில் இடம் பெற்றார். ஜோ பர்ன்ஸ், டிரெவிஸ் ஹெட் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப் பட்டனர்.
இந்தியா: ரகானே (கேப்டன்), ரோகித் சர்மா ( துணை கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விகாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், சிராஜ், பும்ரா, சைனி.
ஆஸ்திரேலியா:டிம் பெய்ன் (கேப்டன்), வார்னர், புகோவ்ஸ்கி, லபுசேன், ஸ்டீவ் சுமித், கேமரூன் கிரீன், மேத்யூ வேட், கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன், ஹாசல்வுட்,
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். வார்னரும், புதுமுக வீரர் புகோவ்ஸ்கியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வேகப்பந்து வீச்சாளர்களான பும்ராவும், முகமது சிராஜும் தொடக்கத்தில் பந்து வீசினார்கள்.
4-வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஜோடியை சிராஜ் தனது அபாரமான பந்துவீச்சால் பிரித்தார். வார்னர் 5 ரன்னில் அவரது பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.அப்போது ஸ்கோர் 6 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு புகோவ்ஸ்கியுடன் மார்னஸ் லபுசேன் ஜோடி சேர்ந்தார்.
ஆஸ்திரேலிய அணி 7.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அப்போது புகோவ்ஸ்கி 14 ரன்னிலும், லபுசேன் 2 ரன்னிலும் இருந்தனர்.
இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய ஆஸ்திரேலுயா அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். புதுமுக ஆட்டகாரரான புகோவ்ஸ்கி முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்து கலக்கினார். அவர் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சைனி பந்து வீச்சில் வெளியேறினார்.
இந்நிலையில் லபுசேனுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் விக்கெட் இழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களை எடுத்தது. ஸ்மித் 31 ரன்களிலும் லபுசேன் 67 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இந்திய அணி தரப்பில் சிராஜ் சைனி தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.