TAMIL
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 0-3 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் வருகிற 21-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 29-ந் தேதியும் தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான நியூசிலாந்து கிரிக்கெட் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கையில் காயம் அடைந்த சீனியர் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் உடல் தகுதியை எட்டிவிட்டதால் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
டிரென்ட் பவுல்ட் அணிக்கு திரும்பி இருப்பது அந்த அணியின் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடிய அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சுழற்பந்து வீச்சாளர் சோதிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான உயரமான (6 அடி 8 அங்குலம்) வேகப்பந்து வீச்சாளரான கைல் ஜாமிசன் டெஸ்ட் அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் அணியில் இடம் பெற்றுள்ளார்.
டாம் பிளன்டெல், டாம் லாதமுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன் டெஸ்ட் போட்டி ராஸ் டெய்லருக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்.
இதன் மூலம் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிய 4-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை ராஸ் டெய்லர் பெறுகிறார்.
ஏற்கனவே முன்னாள் வீரர்கள் பிரன்டன் மெக்கல்லம், டேனியல் வெட்டோரி, ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளனர்.
அத்துடன் 3 வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் 100 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையையும் ராஸ் டெய்லர் இந்த போட்டியின் மூலம் பெற இருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான 13 பேர் கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் வருமாறு:-
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளன்டெல், டிரென்ட் பவுல்ட், காலின் டி கிரான்ட்ஹோம், கைல் ஜாமிசன், டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் பட்டேல், டிம் சவுதி, ராஸ் டெய்லர், நீல் வாக்னெர், வாட்லிங்.