CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரிஷாப் பண்ட் அபார சதத்தால் முன்னிலை பெற்றது இந்தியா – வாஷிங்டன் சுந்தரும் கலக்கல்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ரிஷாப் பண்ட் அபார சதத்தால் முன்னிலை பெற்றது இந்தியா - வாஷிங்டன் சுந்தரும் கலக்கல்

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (8 ரன்), புஜாரா (15 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடினர். வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சனும், பென் ஸ்டோக்சும் தாக்குதலை தொடுத்தனர். இவர்களின் பந்து வீச்சு மிரட்டலாக இருந்ததால், ரோகித்-புஜாரா ஜோடி அளவுக்கு அதிகமாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல் 10 ஓவர்களில் 12 ரன் மட்டுமே எடுத்தனர். 16 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய புஜாரா 17 ரன்னில் (66 பந்து) ஜாக் லீச்சின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் பிரயோஜனம் இல்லை. அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (0), ஸ்டோக்ஸ் வீசிய ஷாட்பிட்ச்சாக விழுந்து எழும்பிய பந்தில் விக்கெட் கீப்பர் பென் போக்சிடம் கேட்ச் ஆகி ஏமாற்றத்துடன் நடையை கட்டினார். இந்த தொடரில் கோலி 2-வது முறையாக டக்-அவுட் ஆகியிருக்கிறார்.

4-வது விக்கெட்டுக்கு இறங்கிய துணை கேப்டன் அஜிங்யா ரஹானே சற்று வேகம் காட்டினார். ஆனால் மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய பந்தில் ரஹானே (27 ரன், 45 பந்து, 4 பவுண்டரி) வீழ்ந்தார். அவர் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஸ்டோக்சிடம் பிடிபட்டார்.

இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா (49 ரன், 144 பந்து, 7 பவுண்டரி), அஸ்வின் (13 ரன்) சிறிய இடைவெளியில் வெளியேற இந்தியாவுக்கு சிக்கல் உண்டானது. அப்போது இந்தியா 6 விக்கெட்டுக்கு 146 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது. இங்கிலாந்து பவுலர்களுக்கு உற்சாகம் பீறிட்டது.

இந்த சூழலில் 7-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும், தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் கைகோர்த்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் நம்பிக்கையை சீர்குலைத்தனர். தேனீர் இடைவேளைக்கு பிறகு இருவரும் மட்டையை அதிரடியாக சுழட்டி ரன்வேட்டையாடினர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்து ரசிகர்களையும் குஷிப்படுத்தினர். தொடக்கத்தில் அச்சுறுத்திய ஆண்டர்சனின் பந்து வீச்சிலும் சில பவுண்டரிகளை பண்ட் ஓட விட்டு அசத்தினார். இவர்களின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டதுடன், இங்கிலாந்தின் ஸ்கோரையும் கடந்து முன்னிலை பெற்றது.

ஜோ ரூட்டின் பந்து வீச்சில் பிரமாதமான ஒரு சிக்சரை பறக்க விட்டு ரிஷாப் பண்ட் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். இந்திய மண்ணில் அவரது முதல் சதம் இதுவாகும்.

அணியின் ஸ்கோர் 259 ரன்களாக உயர்ந்த போது ரிஷாப் பண்ட் (101 ரன், 118 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) ஆண்டர்சன் வீசிய பந்தை லெக்சைடில் ஓங்கி அடித்த போது அதை ரூட் கேட்ச் செய்தார். பண்ட்-வாஷிங்டன் கூட்டணி 7-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் (158 பந்து) திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர்- அக்‌ஷர் பட்டேல் ஜோடியினர் மேற்கொண்டு விக்கெட் விழாமல் சமாளித்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 94 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் சேர்த்து மொத்தம் 89 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. தனது 3-வது அரைசதத்தை எட்டிய வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களுடனும் (117 பந்து, 8 பவுண்டரி), அக்‌ஷர் பட்டேல் 11 ரன்னுடனும் (34 பந்து, 2 பவுண்டரி) அவுட் ஆகாமல் உள்ளனர்.

இந்த டெஸ்டை பொறுத்தவரை தற்போது இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து 205

இந்தியா

சுப்மான் கில் எல்.பி.டபிள்யூ (பி)

ஆண்டர்சன் 0

ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ

(பி) ஸ்டோக்ஸ் 49

புஜாரா எல்.பி.டபிள்யூ (பி) ஜாக் லீச் 17

விராட் கோலி (சி) போக்ஸ்

(பி) ஸ்டோக்ஸ் 0

ரஹானே (சி) ஸ்டோக்ஸ் (பி)

ஆண்டர்சன் 27

ரிஷாப் பண்ட் (சி) ரூட் (பி)

ஆண்டர்சன் 101

அஸ்வின் (சி) போப் (பி) லீச் 13

வாஷிங்டன் சுந்தர் (நாட்-அவுட்) 60

அக்‌ஷர் பட்டேல் (நாட்-அவுட்) 11

எக்ஸ்டிரா 16

மொத்தம் (94 ஓவர்களில்

7 விக்கெட்டுக்கு) 294

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-40, 3-41, 4-80, 5-121, 6-146, 7-259.

பந்து வீச்சு விவரம்

ஆண்டர்சன் 20-11-40-3

பென் ஸ்டோக்ஸ் 22-6-73-2

ஜாக் லீச் 23-5-66-2

டாம் பெஸ் 15-1-56-0

ஜோ ரூட் 14-1-46-0

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker