TAMIL

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட ஆர்வமுடன் காத்திருக்கிறேன் – ரோகித் சர்மா

*‘இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

ஆஸ்திரேலிய மண்ணில் அதுவும் இந்த முறை டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் திரும்பி இருப்பதால் நிச்சயம் வித்தியாசமான தொடராக இது இருக்கும்’ என்று இந்திய வீரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

*பேட்மிண்டன் விளையாட்டின் நல்லெண்ண தூதர்களில் ஒருவராக இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நியமித்து இருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக தனது அனுபவத்தோடு பேட்மிண்டன் விளையாட்டை நேசித்து, நேர்மையுடனும், சர்ச்சைகளுக்கு இடமின்றியும் விளையாட வேண்டும் என்ற விழிப்புணர்வை இளம் வீரர்கள் மத்தியில் சிந்து ஏற்படுத்துவார்.

*இந்திய இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா அளித்த ஒரு பேட்டியில், ‘எனது ஆட்டத்தை சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிட்டு பேசும் போது நெருக்கடி ஏற்படுகிறது.

ஆனால் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கிறேன்.

நான் அவரை போல் விளையாட முயற்சிக்கிறேன். அவர் கிரிக்கெட்டின் கடவுள்’ என்றார்.

*‘நான் எதிர்கொண்ட பந்து வீச்சாளர்களிலேயே மிகவும் கடினமானவர் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளார் ஜேம்ஸ் ஆண்டர்சன் தான்.

அதுவும் இங்கிலாந்து மண்ணில் அவரது பந்து வீச்சு கடும் சவாலாக இருக்கும்’ என்று இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே கூறியுள்ளார்.

*‘ஆண்கள் (ஏ.டி.பி.) மற்றும் பெண்கள் (டபிள்யூ.டி.ஏ.) சர்வதேச டென்னிஸ் சங்கங்கள் இரண்டும் ஒரே அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டும்.

அதற்கு இதுவே சரியான நேரம்’ என்று டென்னிஸ் ஜாம்பவான் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வலியுறுத்தியுள்ளார்.

*‘கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் இன்னும் சில காலத்துக்கு கிரிக்கெட் போட்டி எதுவும் தொடங்கப்பட வாய்ப்பில்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

*தேசிய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளர் கோபிசந்த் ஐதராபாத்தில் பேட்மிண்டன் அகாடமி நடத்தி வருகிறார்.

இந்த அகாடமியின் உறுப்பினர்கள், வீரர்கள், உதவியாளர்கள் அனைவரும் இணைந்து ரூ.7½ லட்சம் திரட்டி கொரோனா பாதிப்புக்கு உதவிட நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker