CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் எளிதில் வெல்ல முடியாது – புஜாரா கருத்து
2018-19-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதல்முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. 71 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இந்த வெற்றியை சாத்தியமாக்கியது. இந்த தொடரில் புஜாரா 3 சதம் உள்பட 521 ரன்கள் குவித்தார்.
அதன் பிறகு தற்போது ஆஸ்திரேலியா சென்று இருக்கும் இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா இடம் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டி தொடர் குறித்து புஜாரா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால் கடந்த முறை (2018-19) தொடரில் விளையாடாத ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் அணியில் இடம் பெற்று இருப்பதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை முன்பை விட சற்று வலுவடைந்துள்ளது. எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் எளிதில் வெற்றி கிடைத்து விடாது. வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமானதாகும். சுமித், வார்னர், லபுஸ்சேன் ஆகியோர் சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. எங்கள் அணியில் இடம் பிடித்து இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த போட்டி தொடரில் விளையாடியவர்கள். அவர்கள் கடந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் வெற்றியை அனுபவித்து இருக்கிறார்கள். எனவே ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அதற்கான திட்டத்தை பந்து வீச்சாளர்கள் வைத்து இருப்பார்கள். அந்த திட்டத்தை நாம் நேர்த்தியாக செயல்படுத்தினால் அவர் கள் சுமித், வார்னர் போன்றோரின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தி விடுவார்கள்.
கடந்த ஆஸ்திரேலிய தொடரில் செயல்பட்டது போல் இந்த முறையும் நாம் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் தொடரை வெல்ல நமக்கு எல்லா வகையிலும் வாய்ப்புள்ளது. ‘பிங்க்’ (பகல்-இரவு டெஸ்ட்) பந்தில் விளையாடுவது என்பது வித்தியாசமான சவாலாகும். அந்த சவாலை ஒரு அணியாக நம்மால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன். மின்னொளியில் ஆடும் சவாலுக்கு தகுந்தபடி நம்மை விரைவில் பழக்க படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். கடந்த முறையை போல் இந்த முறையும் இந்த தொடருக்காக நான் நன்றாக தயாராகி வந்து இருக்கிறேன். அது எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும் என்று நினைக்கிறேன். உங்களது தனிப்பட்ட சிறப்பான ஆட்டத்தால் மட்டும் வெற்றியை பெற்று விட முடியாது. வெற்றிக்கு மற்ற வீரர்களின் ஆதரவும் தேவையானதாகும். பந்து வீச்சாளர்கள் உள்பட அனைவரும் அணியாக இணைந்து சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
இவ்வாறு புஜாரா கூறினார்.