TAMIL

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

மும்பையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை பந்தாடியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது.



இந்திய அணியில் இரு மாற்றமாக காயமடைந்த ரிஷாப் பண்ட் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு பதிலாக மனிஷ் பாண்டே, நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இல்லை.

மீண்டும் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதன்படி ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர்.

பேட்டிங்குக்கு சொர்க்கபுரியான இந்த ஆடுகளத்தில் இருவரும் அவசரமின்றி ஏதுவான பந்துகளை விரட்டியடித்தனர்.

ஸ்கோர் சீரான வேகத்தில் நகர்ந்தது.

முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா பிரித்தார்.

அவரது பந்து வீச்சில் ரோகித் சர்மா (42 ரன், 44 பந்து, 6 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ.

ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

அடுத்து கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவானுடன் கைகோர்த்தார்.

கோலி வந்ததும் அணியின் ரன்ரேட் 6-ஐ தொட்டது. சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகரின் சுழலில் தொடர்ந்து 2 பவுண்டரி விளாசிய தவான், அவரது இன்னொரு ஓவரில் சிக்சர் பறக்க விட்டார்.



18-வது சதத்தை நெருங்கிய தவான் துரதிர்ஷ்டவசமாக 96 ரன்களில் (90 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேன் ரிச்சர்ட்சனின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

அடுத்து இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் (7 ரன்) ஜம்பாவின் சுழலில் கிளன் போல்டு ஆனார். 4-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் களம் புகுந்தார்.

மறுமுனையில் 56-வது அரைசதத்தை கடந்த கோலி 78 ரன்களில் (76 பந்து, 6 பவுண்டரி) ஜம்பாவின் பந்து வீச்சை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார்.

ஜம்பாவின் சுழல் வலையில் கோலி சிக்குவது இது 5-வது நிகழ்வாகும்.

கடைசி கட்டத்தில் ராகுல் அதிரடியில் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

மிட்செல் ஸ்டார்க், கம்மின்சின் ஓவர்களில் பவுண்டரி, சிக்சர்களை தெறிக்க விட்ட லோகேஷ் ராகுல், சவாலான ஸ்கோரை எட்ட வழிவகுத்ததுடன் 80 ரன்களில் (52 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது.

கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய பேட்ஸ்மேன்கள் 91 ரன்கள் திரட்டினர்.

பின்னர் 341 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடியது.

முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ டேவிட் வார்னர் (15 ரன்) இந்த முறை நிலைக்கவில்லை.



முகமது ஷமியின் பந்து வீச்சில் அவர் அடித்த ஷாட்டை ‘கவர்’ திசையில் நின்ற மனிஷ் பாண்டே துள்ளிகுதித்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து கேப்டன் ஆரோன் பிஞ்சும், ஸ்டீவன் சுமித்தும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சைனியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்திய சுமித், துரிதமான ரன்சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஸ்கோர் 82 ரன்களை எட்டிய போது, ஆரோன் பிஞ்ச் (33 ரன்) ஜடேஜாவின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அடுத்து மார்னஸ் லபுஸ்சேன் வந்தார்.

சுமித்-லபுஸ்சேன் ஜோடி தான் இந்தியாவுக்கு கொஞ்சம் குடைச்சல் கொடுத்தது.

இந்த கூட்டணியை உடைக்க இந்திய கேப்டன் விராட் கோலி அடிக்கடி வியூகங்களை மாற்ற வேண்டி இருந்தது.

ஆனால் ரன்தேவை அதிகரித்துக் கொண்டே போனதால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்குள்ளானார்கள்.

லபுஸ்சேன் தனது பங்குக்கு 46 ரன்கள் (47 பந்து, 4 பவுண்டரி) எடுத்தார்.

இன்னொரு பக்கம் இந்திய பவுலர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஸ்டீவன் சுமித் 98 ரன்களில் (102 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) குல்தீப் யாதவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

பந்து அவரது பேட்டில் பட்டு ஸ்டம்பையும் பதம் பார்த்தது.

இதற்கிடையே விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் (18 ரன்) குல்தீப் யாதவின் சுழலில் வீழ்ந்தார்.




சுமித் வெளியேறியதும் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை தகர்ந்தது. ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது.

49.1 ஓவர்களில் ஆஸ்திரேலியா 304 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

அரைசதம் அடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.

தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூருவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ

(பி) ஜம்பா 42

தவான் (சி) ஸ்டார்க் (பி)

ரிச்சர்ட்சன் 96

கோலி (சி) ஸ்டார்க் (பி)

ஜம்பா 78

ஸ்ரேயாஸ் அய்யர் (பி) ஜம்பா 7

லோகேஷ் ராகுல்(ரன்-அவுட்) 80

மனிஷ் பாண்டே (சி) அகர் (பி)

ரிச்சர்ட்சன் 2

ஜடேஜா (நாட்-அவுட்) 20

முகமது ஷமி (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 14



மொத்தம் (50 ஓவர்களில்

6 விக்கெட்டுக்கு) 340

விக்கெட் வீழ்ச்சி: 1-81, 2-184, 3-198, 4-276, 5-280, 6-338

பந்து வீச்சு விவரம்

கம்மின்ஸ் 10-1-53-0

மிட்செல் ஸ்டார்க் 10-0-78-0

கேன் ரிச்சர்ட்சன் 10-0-73-2

ஆடம் ஜம்பா 10-0-50-3

ஆஷ்டன் அகர் 8-0-63-0

லபுஸ்சேன் 2-0-14-0

ஆஸ்திரேலியா

வார்னர் (சி) பாண்டே (பி) ஷமி 15

ஆரோன் பிஞ்ச் (ஸ்டம்பிங்)

ராகுல் (பி) ஜடேஜா 33

ஸ்டீவன் சுமித் (பி) குல்தீப் 98

லபுஸ்சேன் (சி) ஷமி (பி)

ஜடேஜா 46

அலெக்ஸ் கேரி (சி) கோலி

(பி) குல்தீப் 18

ஆஷ்டன் டர்னர் (பி) ஷமி 13

ஆஷ்டன் அகர் (பி) சைனி 25



கம்மின்ஸ் (பி) ஷமி 0

மிட்செல் ஸ்டார்க் (சி) ராகுல்

(பி) சைனி 6

ரிச்சர்ட்சன் (நாட்-அவுட்) 24

ஆடம் ஜம்பா (சி) ராகுல்(பி)பும்ரா 6

எக்ஸ்டிரா 20

மொத்தம் (49.1 ஓவர்களில்

ஆல்-அவுட்) 304

விக்கெட் வீழ்ச்சி: 1-20, 2-82, 3-178, 4-220, 5-221, 6-259, 7-259, 8-274, 9-275

பந்துவீச்சு விவரம்

பும்ரா 9.1-2-32-1

முகமது ஷமி 10-0-77-3

நவ்தீப் சைனி 10-0-62-2

ஜடேஜா 10-0-58-2

குல்தீப் யாதவ் 10-0-65-2

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker