CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 96/2 – சுப்மன் கில் அரை சதம்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னியில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 5 ரன்னில் அவுட் ஆனார்.
அப்போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. புதுமுக வீரர் புகோவ்ஸ்கி – லபுஸ்சேன் ஜோடி நிதானமாக விளையாடியது. புகோல்ஸ்கி 62 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அடுத்து லபுஸ்சேனுடன் ஸ்டீவன் சுமித் ஜோடி சேர்ந்தார்.
இவர்கள் இந்திய பந்து வீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தனர். லபுஸ் சேன் அரை சதம் அடித்தார்.
நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 55 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து இருந்தது. லபுஸ்சேன் 67 ரன்னுடனும், ஸ்டீவன் சுமித் 31 ரன்னுடனும் களத் தில் இருந்தனர். மழையால் முதல் நாளில் 35 ஓவர் இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித் தொடர்ந்து விளையாடினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அவரது பந்தில் லபுஸ்சேன் அவுட் ஆனார். லபுஸ்சேன் 196 பந்தில் 91 ரன் (11 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். அப்போது ஸ்கோர் 206 ரன்னாக இருந்தது. அடுத்து களம் வந்த மாத்யூ வாடே (13 ரன்) விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்றினார்.
ஸ்டீவன் சுமித்துடன் ஜோடி சேர்ந்த ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் தடுமாறினார். அவர் 21 பந்தை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அதேபோல் கேப்டன் டிம் பெய்ன் (1 ரன்) பும்ரா பந்திலும், கம்மின்ஸ் (0) ஜடேஜா பந்திலும் போல்டு ஆனார்கள். அப்போது ஸ்கோர் 7 விக்கெட்டுக்கு 278 ரன்னாக இருந்தது.
அடுத்து மிட்செல் ஸ்டார்க் களம் வந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஸ்டீவன் சுமித் நிலைத்து நின்று சதம் அடித்தார்.
76-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 27-வது சதம் ஆகும். முதல் இரண்டு டெஸ்டுகளில் ஸ்டீவன் சுமித் சொதப்பியதால் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா 100.1 ஓவரில் 300 ரன்னை தொட் டது. மிட்செல் ஸ்டார்க் 24 ரன்னில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை நவ்தீப் சைனி வீழ்த்தினார். அடுத்து வந்த நாதன் லயன், ஜடேஜா பந்தில் டக்-அவுட் ஆனார். ஆஸ்திரேலியா 315 ரன்னுக்கு 9 விக்கெட்டை இழந்தது. இதனால் ஸ்டீபன் சுமித் ரன்களை துரிதமாக சேர்க்கும்படி விளையாடினார்.
அவர் 131 ரன் (226 பந்து 16 பவுண்டரி) கடைசி விக்கெட்டாக ரன்-அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியா 105.4 ஓவரில் 338 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ஹேசில்வுட் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள், பும்ரா, சைனி தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 2 டெஸ்டில் அசத்திய அஸ்வின் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை விளையா டியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன்கில் ஆகியோர் களம் இறங்கினர். தேனீர் இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 9 ஓவரில் 26 ரன் எடுத்து இருந்தது. ரோகித்சர்மா 11 ரன்னுடனும், சுப்மன்கில் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியை ஹசில்வுட் பிரித்தார். அவர் பந்து வீச்சில் ரோகித் சர்மா அவுட் ஆனார். 77 பந்துகள் சந்தித்து 26 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். அவர் அவுட் ஆன சிறுது நேரத்தில் சுப்மான் கில் கம்மின்ஸ் ஓவரில் வெளியேறினார். அவர் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார். அதில் 8 பவுண்டரி அடங்கும்.
இந்நிலையில் புஜாராவுடன் ரஹானே ஜோடி சேர்ந்து நிதானாமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க இருவரும் தொடர்ந்து பல ஓவர்களை மெய்டன் செய்தனர்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்தது. ரஹானே 5 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஹசில்வுட், கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.