CRICKETLATEST UPDATESNEWSTAMIL

ஆட்டநாயகன் விருதை ‌ஷர்துல் தாகூருக்கு கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது – விராட்கோலி

ஆட்டநாயகன் விருதை ‌ஷர்துல் தாகூருக்கு கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது - விராட்கோலி

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது

புனேயில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 48.2 ஓவரில் 329 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.

ரி‌ஷப்பண்ட் 62 பந்தில் 78 ரன்னும் ( 5 பவுண்டரி, 4 சிக்சர் ), தவான் 56 பந்தில் 67 ரன்னும் ( 10 பவுண்டரி), ஹர்திக் பாண்ட்யா 44 பந்தில் 64 ரன்னும் ( 5 பவுண்டரி , 4 சிக்சர் ) எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட் 3 விக்கெட்டும் , ஆதில் ரஷீத் 2 விக்கெட்டும், சாம் கரண் , டாப்ளே , பென் ஸ்டோக்ஸ் , மொய்ன் அலி, லிவ்விங் ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

8-வது வீரராக களம் இறங்கிய சாம் கரண் வெற்றிக்காக கடுமையாக போராடினார். அவர் 83 பந்தில் 95 ரன் எடுத்து ( 9 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். டேவிட் மலன் 50 ரன்னும், லிவ்விங்ஸ்டோன் 36 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ‌ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டும் , நடராஜன் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் இந்தியா ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா 66 ரன்னிலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தன.

ஏற்கனவே டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்று இருந்தது. 3 வடிவிலான தொடரையும் கைப்பற்றி சாதித்தது.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இங்கிலாந்து வீரர்களுக்கு கிடைத்தது. சாம் கரண் ஆட்டநாயகன் விருதையும், பேர்ஸ்டோவ் ( 3 ஆட்டத்தில் 219 ரன்) தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இது தொடர்பாக இந்திய அணி கேப்டன் விராட்கோலி அதிருப்தி அடைந்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

‌ஷர்துல் தாகூருக்கு தான் நேர்மையாக ஆட்ட நாயகன் விருது கொடுத்து இருக்க வேண்டும். அவருக்கு இந்த விருதை கொடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

அவர் 10 ஓவர் வீசி 67 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அதோடு 20 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.

இதேபோல தொடர்நாயகன் விருதை புவனேஷ்குமாருக்கு கொடுத்து இருக்க வேண்டும். அவர் 6 விக்கெட் கைப்பற்றினார். ரன்களை அதிகமாக கொடுக்காமல் சிக்கனமாக வீசினார்.

கேட்ச்களை நிறைய தவற விட்டோம். இது ஏமாற்றம் அளிக்கிறது. கேட்ச்களை தவற விடுவதால் சில சமயம் போட்டியின் முடிவே பாதகமாகிவிடும். எங்களது பந்து வீச்சாளர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்து விட்டனர்.

இவ்வாறு விராட்கோலி கூறினார்.

சர்வதேச போட்டிகள் முடிவடைந்ததால் இந்திய வீரர்கள் இனி ஐ.பி.எல். ஆட்டத்தில் ஆடுவார்கள். ஐ.பி.எல். போட்டி வருகிற 9-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. 

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker