CRICKETLATEST UPDATESNEWSTAMIL

அஸ்வின்- விஹாரி பொறுப்பான ஆட்டம்… ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி டிரா

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 244 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 94 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 312 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனால் இந்தியாவுக்கு 407 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து இருந்தது. ரோகித் சர்மா 52 ரன்னிலும், சுப்மன் கில் 31 ரன்னிலும் அவுட் ஆனார்கள். புஜாரா 9 ரன்னும், ரகானே 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 309 ரன்கள் தேவை கைவசம் 8 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. எஞ்சிய 8 விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தொடர்ந்தது.

போட்டி தொடங்கிய 2-வது ஓவரிலேயே ரகானே மேலும் ரன் ஏதும் எடுக்காமல் அதே 4 ரன்னில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை லயன் வீழ்த்தினார். அப்போது ஸ்கோர் 102 ஆக இருந்தது

அடுத்து ரி‌ஷப் பண்ட் களம் வந்தார். முதல் இன்னிங்சில் பேட்டிங்கின் போது முழங்கையில் காயம் அடைந்ததால் அவர் கீப்பிங் செய்யவில்லை. அதில் இருந்து குணமடைந்த ரி‌ஷப்பண்ட் இன்று அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் 64 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 15-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3-வது அரை சதமாகும்.

இந்திய அணி 68-வது ஓவரில் 200 ரன்னை தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன் எடுத்து இருந்தது. ரி‌ஷப்பண்ட் 74 ரன்னும், புஜாரா 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரி‌ஷப்பண்டின் ஆட்டம் தொடர்ந்து அதிரடியாக இருந்தது. கிரீன், லயன் ஓவர்களில் அவர் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் விளாசினார்.

மறுமுனையில் இருந்த புஜாரா அவருக்கு உறுதுணை அளிக்கும் வகையில் நிதானமாக ஆடினார். அவர் 170 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். அவரது 27-வது அரை சதமாகும். முதல் இன்னிங்சிலும் அவர் அரை சதம் எடுத்திருந்தார்.

புதிய பந்தை எடுப்பதற்குள் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கில் ரி‌ஷப்பண்ட் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 97 ரன்னில் ஆட்டம் இழந்தார். 118 பந்துகளில் 12 பவுண்டரி, 3 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

ரி‌ஷப்பண்ட் விக்கெட்டை லயன் கைப்பற்றினார். புதிய பந்தை எடுப்பதற்கான கடைசி ஓவரில் அவர் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 77 ரன்னில் இருக்கும் போது ஹசில்வுட் பந்தில் போல்ட் ஆனார். இதனால் இதனால் இந்திய அணி தோல்வி அடைய நிறைய வாய்ப்பு இருந்தது.

இதனையடுத்து விஹாரி அஸ்வின் ஜோடி பொறுப்புடன் ஆடியது. கடைசி வரை விக்கெட் கொடுக்காமல் இந்த ஜோடி போட்டியை டிரா செய்தது. விஹாரி 161பந்துகள் சந்தித்து 23 ரன்களுடனும் அஸ்வின் 128 பந்துகள் சந்தித்து 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி தோல்வி அடைந்து விடும் என்று நினைத்த நிலையில் இந்த ஜோடி நம்பிக்கை அளித்து விளையாடியது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் 15-ம் தேதி தொடங்குகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker