CRICKETNEWSTAMIL

முதல் டி 20 போட்டி – தென்ஆப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.

 

இரு அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.

மாலன் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய வுஹன் லூபி 4 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அவருக்கு அடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் கிளாசன், மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதிரடியாக ஆடிய மார்கரம் 51 ரன்னும், 28 பந்துகளில் 4 சிக்சர் உள்பட 50 ரன்கள் எடுத்திருந்த கிளாசனும் வெளியேறினர்.

இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.

 
அரை சதமடித்த மார்கிராம்
 

பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் மற்றும் ஹசன் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர்.

பாபர் அசாம் 14 ரன்னில் வெளியேறினார். பகர் சமான் 27 ரன்னிலும், முகமது ஹபீஸ் 13 ரன்னிலும், ஹைதர் அலி 14 ரன்னிலும், முகமது நவாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய முகமது ரிஸ்வான் அரை சதம் கடந்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்த பஹூம் அஷ்ரப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் எதிரணி பந்து வீச்சை சிதறடித்தனர். 14 பந்துகளை சந்தித்த பஹூம் அஷ்டப் 30 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கான 189 ரன்களை எட்டியது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலையில் உள்ளது.

50 பந்துகளில் 74 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆட்டநாயகன் விருது ரிஸ்வானுக்கு அளிக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்கா சார்பில் ஹெண்ட்ரிகஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker