TAMIL

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: லபுஸ்சேன் சதத்தால் ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது.

ஆஸ்திரேலியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்ட போதிலும் அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து அணியில் உடல்நலக்குறைவு மற்றும் காயம் காரணமாக 5 வீரர்களை மாற்ற வேண்டியதாகி விட்டது.



கேப்டன் கேன் வில்லியம்சன் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

மேலும் டிரென்ட் பவுல்ட், ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி ஆகியோரும் நீக்கப்பட்டனர்.

இவர்களுக்கு பதிலாக ஜீத் ரவல், புதுமுக வீரர் கிளென் பிலிப்ஸ், டாட்ஆஸ்டில், வில்லியம் சோமர்வில்லே, மேட் ஹென்றி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். கேப்டன் பொறுப்பை டாம் லாதம் ஏற்றார்.

நியூசிலாந்து அணியின் 30-வது டெஸ்ட் கேப்டன் என்ற சிறப்பை லாதம் பெற்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் வில்லியம்சன், டிரென்ட் பவுல்ட், சவுதி ஆகிய அனுபவ வீரர்களில் ஒருவர் கூட இல்லாமல் நியூசிலாந்து களம் இறங்குவது 2009-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி டேவிட் வார்னரும், ஜோ பர்ன்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

ஒரு மணிநேரம் தாக்குப்பிடித்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தனர். ஜோ பர்ன்ஸ் 18 ரன்னில் வெளியேறினார்.

இதன் பின்னர் மார்னஸ் லபுஸ்சேன் வந்தார். ரன் குவிக்கும் எந்திரமாக உருவெடுத்துள்ள லபுஸ்சேன் நிலைத்து நின்று அசத்தினார்.

மறுமுனையில் வார்னர் 45 ரன்களில் (80 பந்து, 3 பவுண்டரி) நீல் வாக்னெரின் பந்து வீச்சில் வீழ்ந்தார்.

வார்னர் 4-வது முறையாக இந்த தொடரில் வாக்னெரின் பந்துவீச்சில் சிக்கியிருக்கிறார்.



இதைத் தொடர்ந்து லபுஸ்சேனும், முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் ஜோடி சேர்ந்து அணியை வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்தனர்.

ஆரம்பத்தில் தகிடுதத்தம் போட்ட சுமித் போக போக சமாளித்துக் கொண்டார்.

அபாரமாக ஆடிய லபுஸ்சேன் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 4-வது சதத்தை நிறைவு செய்தார்.

இந்த 4 சதங்களையும் அவர் கடைசி 5 டெஸ்டுகளில் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் 29-வது அரைசதத்தை கடந்த ஸ்டீவன் சுமித் 80-வது ஓவருக்கு எடுக்கப்பட்ட புதிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அணியின் ஸ்கோர் 251 ரன்களாக உயர்ந்த போது ஸ்டீவன் சுமித் (63 ரன், 182 பந்து, 4 பவுண்டரி) வேகப்பந்து வீச்சாளர் கிரான்ட்ஹோம் வீசிய ‘அவுட்ஸ்விங்’ பந்தில் ஸ்லிப்பில் நின்ற ராஸ் டெய்லரிடம் பிடிபட்டார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 283 ரன்கள் சேர்த்துள்ளது.

லபுஸ்சேன் 130 ரன்களுடனும் (210 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), மேத்யூ வேட் 22 ரன்னுடனும் (30 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் உள்ளனர்.



இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெரின் பந்து வீச்சில் 4 முறை ஆட்டம் இழந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இந்த டெஸ்டில் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடினார்.

தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய அவர் கொஞ்சம் தடுமாற்றத்திற்கும் உள்ளானார்.

முதல் ரன்னை எடுக்க அவருக்கு 39 பந்துகள், 46 நிமிடங்கள் தேவைப்பட்டன.

முதல் ரன் எடுக்க இந்த அளவுக்கு அவர் போராடியது இது தான் முதல் முறையாகும்.

ஒரு வழியாக அவர் முதல் ரன்னை எடுத்த போது, ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

சுமித்தும் தனது உற்சாகத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker