TAMIL
டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார், டொமினிக் திம்
டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘போர்க்’ பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார். 2 மணி 47 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் டொமினிக் திம் 6-7 (5), 6-3, 7-6 (5) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். தனது தொடக்க ஆட்டத்தில் ரோஜர் பெடரரை தோற்கடித்து இருந்த டொமினிக் திம் முதல் வீரராக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் அரைஇறுதியை எட்டிய முதல் ஆஸ்திரிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 26 வயதான டொமினிக் திம் கூறுகையில், ‘ஜோகோவிச் ஒரு ஜாம்பவான். அவருக்கு எதிரான இந்த ஆட்டம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இந்த வெற்றியை ஒரு போதும் மறக்கமாட்டேன். அனேகமாக எனது டென்னிஸ் வாழ்க்கையில் இது தான் மிகச்சிறந்த ஆட்டமாக இருக்கும்’ என்றார்.
‘அகாசி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), ரஷியாவின் டேனில் மெட்விடோவுடன் கோதாவில் இறங்கினார். இதில் ஆரம்பத்தில் தடுமாறிய நடால் கடைசி செட்டில் ஒரு கட்டத்தில் 1-5 என்ற கணக்கில் பின்தங்கி தோல்வியின் விளிம்பில் இருந்தார். இதன்பிறகு எதிராளியின் மேட்ச் பாயிண்ட் ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொண்டு மனம் தளராமல் போராடி சரிவில் இருந்து மீண்ட நடால் டைபிரேக்கர் வரை போராடி வெற்றியை வசப்படுத்தி வியக்க வைத்தார். 2 மணி 46 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் நடால் 6-7 (3), 6-3, 7-6 (4) என்ற செட் கணக்கில் மெட்விடேவை தோற்கடித்தார். இதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட நடால் கடைசி லீக்கில் சிட்சிபாசை (கிரீஸ்) சந்திக்கிறார்.