TAMIL

கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில்: தமிழக அணி போராடி தோல்வி – கிருஷ்ணப்பா கௌதம் 8 விக்கெட்டுகளை சாய்த்தார்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-கர்நாடகா இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) திண்டுக்கல் நத்தத்தில் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே கர்நாடகா 336 ரன்களும், தமிழகம் 307 ரன்களும் எடுத்தன.

29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய கர்நாடகா 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது.

தொடர்ந்து ஆடிய கர்நாடகா 2-வது இன்னிங்சில் 65.4 ஓவர்களில் 151 ரன்னில் சுருண்டது.


சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 4 விக்கெட்டும், கே.விக்னேஷ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் தமிழக அணிக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதை நோக்கி ஆடிய தமிழக அணி முதல் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் திரட்டியது.

இதனால் தமிழக அணி சுலபமாக இலக்கை அடைந்து விடும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடக்க ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது.


முரளிவிஜய் (15 ரன்) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார்.

மற்றொரு தொடக்க வீரர் அபினவ் முகுந்த் 42 ரன்னில் கேட்ச் ஆனார்.

சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கௌதம், தமிழக பேட்ஸ்மேன்களை மிரள வைத்தார்.

கேப்டன் விஜய் சங்கர் (5 ரன்), பாபா அபராஜித் (0), தினேஷ் கார்த்திக் (17 ரன்) அவரது சுழலில் சிக்கினர்.

தமிழக அணி தோல்வி ,கடைசி கட்டத்தில் வெற்றியை மறந்து தமிழக வீரர்கள் டிராவுக்காக போராடினர்.

அதற்கும் பலன் இல்லை. தமிழக அணி 2-வது இன்னிங்சில் 63.3 ஓவர்களில் 154 ரன்னில் முடங்கியது.


எஞ்சிய 3 பந்துகளை தமிழக வீரர்கள் சமாளித்து இருந்தால் தோல்வியில் இருந்து தப்பி டிரா செய்திருக்கலாம்.

அதற்குள் வீழ்ந்து விட்டனர்.

முருகன் அஸ்வின் 23 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

26 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்த கர்நாடக அணி 6 புள்ளிகளை தட்டிச் சென்றது.

சுழற்பந்து வீச்சில் வித்தை காட்டிய 31 வயதான கிருஷ்ணப்பா கவுதம் மொத்தம் 30.3 ஓவர்களில் 11 மெய்டனுடன் 60 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார்.

அவர் முதலாவது இன்னிங்சிலும் 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.


வதோதராவில் நடந்த மும்பைக்கு எதிரான மற்றொரு ஆட்டத்தில் 534 ரன்கள் இலக்கை (பி பிரிவு) நோக்கி ஆடிய பரோடா அணி 52.4 ஓவர்களில் 224 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் மும்பை அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.

முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய மும்பை சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஸ் முலானி ஆட்டநாயகனாக தேர்வானார்.

அகர்தலாவில் நடந்த (சி பிரிவு) திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் ‘பாலோ-ஆன்’ ஆகி 153 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஜார்கண்ட் 8 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

அடுத்து 266 ரன்கள் இலக்குடன் விளையாடிய திரிபுரா 211 ரன்களில் ஆட்டம் இழந்து தோல்வி அடைந்தது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker