TAMIL
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, பிரனாய் வெற்றி – சாய்னா வெளியேற்றம்
சாய்னாவுக்கு சறுக்கல்
மொத்தம் ரூ.2¾ கோடி பரிசுத்தொகைக்கான ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஹாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 22-ம் நிலை வீராங்கனையான சீனாவின் காய் யன் யனை சந்தித்தார்.
30 நிமிடம் நடந்த இந்த மோதலில் சாய்னா 13-21, 20-22 என்ற செட் கணக்கில் காய் யன் யனிடம் தோல்வியை தழுவினார். தன்னுடைய கடைசி 6 போட்டி தொடர்களில் 5-ல் முதல் சுற்றிலேயே சாய்னா தோல்வி கண்டு நடையை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிந்து வெற்றி
மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-16 என்ற நேர்செட்டில் கொரியாவின் கிம் கா யூனை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சிந்து அடுத்து தாய்லாந்து வீராங்கனை பூசனன் ஓங்பாம்ருங்பானை சந்திக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 21-17, 21-17 என்ற நேர்செட்டில் சீனாவின் ஹூயாங் யூ ஜியாங்கை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் காஷ்யப் 21-18, 16-21, 21-10 என்ற செட் கணக்கில் 12-ம் நிலை வீரரான கென்டா நிஷிமோட்டாவை (ஜப்பான்) சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இதே போல் இந்தியாவின் சவுரப் வர்மா 21-11, 21-15 என்ற நேர்செட்டில் பிரைஸ் லிவெர்டெஸ்சை (பிரான்ஸ்) வென்றார்.
சாத்விக் ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-17, 16-21, 17-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் தகுரோ ஹோகி- யுகோ கோபாயாஷி ஜோடியிடம் 62 நிமிடங்கள் போராடி பணிந்தது.