TAMIL

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்கள் பர்ன்ஸ், போப் அரைசதம்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நேற்று தொடங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒரே ஒரு மாற்றமாக அல்ஜாரி ஜோசப்புக்கு பதிலாக அதிக எடை கொண்ட கிரிக்கெட் வீரரான சுழற்பந்து வீச்சாளர் ரகீம் கார்ன்வால் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்து அணியில் சாம் கர்ரன், ஜாக் கிராவ்லி நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜோப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன் திரும்பினர்.

தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்த டெஸ்டில் ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்துக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர் டாம் சிப்லி (0) கெமார் ரோச்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட்டும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்பதற்காக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை சமாளிப்பதில் தடுமாறிய ஜோ ரூட் (17 ரன், 59 பந்து) ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரன்-அவுட்டில் வீழ்ந்தார்.

முந்தைய டெஸ்டின் 2-வது இன்னிங்சிலும் ஜோ ரூட் ரன்-அவுட் ஆகியிருந்தார்.

இங்கிலாந்து கேப்டன் ஒருவர் அடுத்தடுத்த இன்னிங்சில் ரன்-அவுட் ஆவது 1995-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

3-வது விக்கெட்டுக்கு இறங்கிய கடந்த டெஸ்டின் கதாநாயகன் ஆல்-ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் (20 ரன்) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.

கெமார் ரோச் வீசிய பந்து இன்ஸ்விங்காகி ஸ்டம்பை பதம் பார்த்தது. மறுமுனையில் அரைசதத்தை கடந்த ரோரி பர்ன்ஸ் 57 ரன்களில் (147 பந்து, 4 பவுண்டரி) வெளியேறினார்.

இதன் பின்னர் ஆலிவர் போப்பும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்து இருந்தது. அப்போது ஆலிவர் போப் 91 ரன்களுடனும், பட்லர் 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker