CRICKETLATEST UPDATESNEWSTAMIL
வெறும் 36 ரன்களில் சுருண்டது இந்தியா- ஆஸ்திரேலியா வெற்றி பெற 90 ரன்களே இலக்கு
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இந்தியாவின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது.
ஆஸ்திரேலிய அணி 72.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. அதிகபட்சமாக டிம் பெய்ன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ், பும்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 53 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. அகர்வால் (5), பும்ரா (0) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். டாப் ஆர்டர் விக்கெட்டுகள் அடுத்தடுத்த சரிந்தன. பும்ரா 2 ரன்களிலும், அகர்வால் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புஜாரா மற்றும் ரகானே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் விராட் கோலி 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பும்ரா, புஜாரா, கோலி ஆகிய முக்கிய விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் வீழ்த்தியதால் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் என்ற நிலையில் பரிதாபமான நிலையில் இருந்தது. 79 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.
தேநீர் இடைவேளைக்கு பிறகு சகா (4), அஸ்வின் (0) ஆகியோர் ஹாசில்வுட் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹனுமா விகாரியின் (8) விக்கெட்டையும் கைப்பற்றினார். கடைசியில் முகமது ஷமி காயத்தால் வெளியேறினார். இதனால் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
இந்திய அணி 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி நிதானமாக ஆடும்பட்சத்தில் இந்த இலக்கை எளிதில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி ஒரு இன்னிங்சில் எடுத்த மிகக்குறைந்த ரன் இதுவாகும். இதற்கு முன்பு 1974ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 42 ரன்கள் எடுத்ததே மிகக்குறைந்த ரன்னாக இருந்தது.