TAMIL
விராட் கோலி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் மிக வேகமாக 1,000 ரன்கள் எடுத்து சாதனை
இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடந்தது.
இப்போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் கோலி இறுதிவரை நின்று விளையாடி ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் குவித்தார்.
இப்போட்டியில் அவர் தனது 22-வது ரன்னை எட்டிய போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக மிக வேகமாக 1,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
டோனிக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையினையும் அவர் பெற்றுள்ளார்.
மேலும் சர்வதேச வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார்.
டோனி 62 20ஓவர் போட்டிகளில் கேப்டனாக களமிறங்கி 1112 ரன்கள் எடுத்திருந்தார்.
பாஃப் டு பிளிசிஸ் (40 ஆட்டங்களில் 1273 ரன்கள்), கேன் வில்லியம்சன் (39 ஆட்டங்களில் 1083 ரன்கள்), ஈயான் மோர்கன் (43 ஆட்டங்களில் 1013 ரன்கள்), அயர்லாந்தின் வில்லியம் போர்ட்டர்பீல்ட் (56 ஆட்டங்களில் 1002 ரன்கள்) ஆகியோர் பட்டியலில் உள்ள மற்ற கேப்டன்கள் ஆவர்.
ஹோல்கர் ஸ்டேடியத்தில் இந்தியாவின் வெற்றியின் போது, 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரராக கோலி, இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மாவின் சாதனையினையும் முறியடித்தார்.
தற்போது 71 இன்னிங்சில் விளையாடியுள்ள கோலி 2663 ரன்கள் குவித்து, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையினை பெற்றார்.
இவரைத் தொடர்ந்து இப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா 96 இன்னிங்ஸ் விளையாடி 2633 ரன்கள் குவித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் 80 இன்னிங்ஸ்களில் 2436 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.