TAMIL

லாராவின் 400 ரன் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார் – வார்னர் கணிப்பு

பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடந்து வரும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 335 ரன்கள் (நாட்-அவுட்) குவித்து பிரமாதப்படுத்தினார். டெஸ்ட் வரலாற்றில் தனிநபர் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா சேர்த்த 400 ரன்களே (2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக) சாதனையாக உள்ளது. லாராவின் சாதனையை வார்னர் முறியடிக்க வாய்ப்பு உருவான நிலையில், திடீரென ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் ‘டிக்ளேர்’ செய்து விட்டார்.



நேற்று சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வார்னரிடம், வரும் காலங்களில் லாராவின் சாதனையை முறியடிக்க எந்த வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு வார்னர், ‘லாராவின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள வீரர் ஒருவரின் பெயரை சொல்ல வேண்டும் என்றால், எனது கணிப்புபடி அது இந்திய வீரர் ரோகித் சர்மாவாகத் தான் இருக்கும். நிச்சயம் அவரால் இச்சாதனையை நிகழ்த்த முடியும்’ என்றார்.

மேலும் வார்னர் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட என்னை அதிகமாக ஊக்குவித்தவர், இந்தியாவின் ஷேவாக். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடிய போது ஒரு முறை எனது அருகில் அமர்ந்திருந்த ஷேவாக் என்னிடம், ‘20 ஓவர் போட்டி வீரரை காட்டிலும் சிறந்த டெஸ்ட் வீரராக நீங்கள் உருவெடுப்பீர்கள்’ என்று கூறினார். அதற்கு, நான் அதிகமாக முதல்தர போட்டிகளில் விளையாடியதில்லை என்று சொன்னேன். ஆனால் ஷேவாக் எப்போதும் என்னிடம், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்லிப், கல்லி திசைகளில் தான் பீல்டர்களை நிறுத்தியிருப்பார்கள். கவர் திசையில் ஆள் இருக்காது. மிட்-ஆப், மிட்-ஆன் பகுதிகளையும் கவனி. நீ உனது பாணியில் அதிரடியாக தொடங்கி நாள் முழுவதும் நின்று விளையாடு’ என்று சொல்வார். அது எனது மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அவரது யோசனைகள் எனக்கு களத்தில் எளிதாக விளையாட உதவுகிறது’ என்றார்.

32 வயதான ரோகித் சர்மா சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இரட்டை சதம் அடித்திருந்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் ரோகித் சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker