TAMIL
ரோகித்துக்கு ஏற்பட்ட காயம் 2 நாட்களில் சரியாகி விடும்; கே.எல். ராகுல் பேட்டி
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது.
இதில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
தொடர்ந்து 5வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று நடந்தது.
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி களமிறங்கவில்லை.
அவருக்கு பதிலாக ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கினார்.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி போட்டி முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி 164 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடியது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் ரோகித் சர்மா பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு பதிலாக போட்டியில் கே.எல். ராகுல் கேப்டனாக களத்தில் செயல்படுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்தது.
பேட்டிங்கின்பொழுது ரோகித் 60 (41 பந்துகள்) ரன்கள் எடுத்தபொழுது காயம் ஏற்பட்டு ரிட்டையர்டு ஹர்ட் ஆனார்.
தொடர்ந்து போட்டியின் 16வது ஓவரில் விளையாடி ஒரு ரன் எடுத்த அவரால் காயத்தினால் தொடர்ந்து விளையாட முடியவில்லை.
இந்த போட்டியில் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.
சர்வதேச அளவிலான போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை எடுத்த 8வது இந்தியர் என்ற பெருமையை ரோகித் பெறுகிறார்.
டி20 போட்டியில் அதிக அளவில் 50 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இறுதியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. டி20 போட்டி தொடர் நாயகனாக கே.எல். ராகுல் அறிவிக்கப்பட்டார்.
அவர் கூறும்பொழுது, 5-0 என்ற போட்டி கணக்கில் வெற்றி பெற்று இங்கு நிற்பது என்பது அதிக மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒவ்வொரு போட்டியிலும் எங்களுடைய திறமைகளை செயல்படுத்தினோம்.
டி20 உலக கோப்பை பற்றி இன்னும் யோசிக்கவில்லை.
இதே முறையிலேயே தொடர்ந்து விளையாடுவேன் என நம்புகிறேன்.
வெற்றி பெறும் பழக்கம் எங்களால் தோற்றுவிக்கப்பட்டு உள்ளது என நான் நினைக்கிறேன்.
வெற்றிக்கான பல்வேறு வழிகளை தேட வேண்டிய பொறுப்பு உள்ளது.
ரோகித் நலமுடனே இருக்கிறார். துரதிர்ஷ்டவசத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டு விட்டது.
2 நாட்களில் அவர் உடல்நலம் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.
2 நாட்கள் ஓய்வு எடுத்து கொள்வார்.
அடிக்கடி கிடைக்கப்பெறாத 5-0 என பெற்ற இந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்.
சற்று ஓய்வும் எடுத்து கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.